முதல் நாளே பும்ரா புயலில் வாங்கியதை பிசிறு தட்டாமல் திருப்பி கொடுத்த இந்தியா

x

பெர்த்தில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, ஆல்ரவுண்டர் நிதிஷ் ரெட்டி ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம்பெற்றனர். முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜெய்ஸ்வால், படிக்கல், கோலி ஆகியோர் பேட்டிங்கில் ஜொலிக்க தவறினர். பின்னர் ரிஷப் பண்ட், நிதிஷ் ரெட்டி ஆகியோரின் பேட்டிங்கால் இந்தியா கவுரமான இலக்கை எட்டியது. இறுதியாக இந்தியா முதல் இன்னிங்சில் 150 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக நிதிஷ் 41 ரன்களும், பண்ட் 37 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவும், இந்திய அணியின் அற்புதமான பந்துவீச்சால் விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ஸ்டீவ் ஸ்மித் கோல்டன் டக் ஆன நிலையில், லபுஷேன் 52 பந்துகளில் வெறும் 2 ரன்களை மட்டுமே எடுத்து வெளியேறினார். முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 67 ரன்களை எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 83 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை காலை 7.50 மணிக்கு இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்