"எங்களுக்கு அஜிதா அக்காதான் வேணும்"-தவெக-வுக்குள் வெடித்த கோஷ்டி மோதல்...ஆரம்பமே விஜய்க்கு தலைவலியா?
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை முகாம், தமிழ்நாடின் பல்வேறு மாவட்டங்களில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, 2 கோஷ்டியாக பிரிந்து தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த தவெக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தியதால், அக்கட்சியினரிடமும், உறுப்பினராக வந்திருந்தவர்களிடமும் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் ஒரு பிரிவினரும், மற்றொரு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் சஜி தலைமையில் ஒரு குழுவினரும் என 2 கோஷ்டிகளாக சேர்ந்து ஆங்காங்கே தவெக உறுப்பினர் சேர்க்கை முகாமில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள மகாலில் தூத்துக்குடி மாவட்ட தலைமை நிர்வாகி சாமுவேல்ராஜ் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடந்தது. இதில், திருச்செந்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பலரும் இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு வந்திருந்தனர். இதில்100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
அப்போது, ஆலந்தலை மீனவ கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள், தாங்கள் அனைவரும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் கட்சியில் இணைத்துக் கொள்வதாக கூறிவிட்டு, உறுப்பினர் சேர்க்கை முகாமில் இருந்து வெளிநடப்பு செய்ததால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்தும் சாமுவேல் ராஜ் பேசி முடிந்ததும், நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. தங்களை தவெக கட்சியில் இணைத்துக் கொண்ட பொதுமக்களுக்கு தவெக-வின் துண்டுகள் போர்த்தி வரவேற்பும் அளிக்கப்பட்டது.
ஆனால், கட்சியின் துண்டுகளை கையில் பெற்ற உடனேயே, அங்கிருந்த அனைவரும் ஒட்டுமொத்தமாக கலைந்து சென்றிருக்கின்றனர். இதனால், தவெக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்த மண்டபம் முழுவதும் வெறும் சேர்களுடன் வெறிச்சோடி காணப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில், 2 கோஷ்டிகளாக பிரிந்து நடத்தப்பட்ட தவெக உறுப்பினர் சேர்க்கையால், எந்த அணியின் மூலமாக தவெக கட்சியில் சேர்வது எனத் தெரியாமல், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் குழப்பத்தில் உள்ளனர்.
இந்த விவகாரத்தில், உயர்மட்ட நிர்வாகிகள் வருவதாகவும், தங்களுக்கு பொறுப்புகள் அளிப்பதாகவும் கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும் அக்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் கட்சி தலைமை இந்த விவகாரத்தை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? எனப் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.