தவெகவில் கிளம்பிய புயல்-விடிய விடிய நடந்த சமரச பேச்சு வார்த்தை -முக்கியமாக விஜய் சொன்ன அந்த வார்த்தை
மாவட்ட வாரியாக பதவிகளை ஒதுக்கீடு செய்வதில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. அதிருப்தியாளர்களை சமரசம் செய்யும் பணி, கட்சித் தலைமை அலுவலகத்தில் விடிய விடிய நடைபெற்றது. பதவிகளை பெறுவதில் போட்டா போட்டி நிலவுவதன் பின்னணியை பார்க்கலாம்.
நடிகர் விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியாக பதிவு செய்ய கடந்தாண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி விண்ணப்பிக்கப்பட்டது.
இதன் ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் அதற்குள்ளாக கட்சி பொறுப்பாளர்களுக்கு நிர்வாக பதவிகள் வழங்க
முடிவு செய்யப்பட்டு மின்னல் வேகத்தில் பணிகள் நடந்து வருகின்றன.
அந்த வகையில் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கட்சி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு தொடர் ஆலோசனைக்குப் பிறகு இறுதிப்பட்டியல் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இதில் பலருக்கு பதவி கிடைக்காததால், ஒரு சில மாவட்டங்களில் அதிருப்தி நிலவியதாகவும் தகவல்கள் வேகமாக பரவியது.
குறிப்பாக தூத்துக்குடி, திருவண்ணாமலை , நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்ட அளவிலான பதவிகளுக்கிடையே கடும் போட்டி நிலவிய நிலையில், அதிருப்தியாளர்களை அழைத்து சமரசம் செய்யும் பணிகள் கட்சித் தலைமை அலுவலகமான பனையூரில் நடைபெற்றது.
பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் காலை 10 மணிக்கு தொடங்கிய பேச்சுவார்த்தை விடிய விடிய நடைபெற்றது.
ஏற்கனவே, தமிழக வெற்றி கழகத்திற்கு 100 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய திட்டமிட்ட நிலையில் தொடர்ந்து நிலவும் அதிருப்தி காரணமாக ஒரு சில மாவட்டங்களில் கூடுதல் மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.
தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிருப்தி நிர்வாகிகளுடன் சமரச பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்திருப்பதாகவும், மீதமுள்ள ஓரிரு மாவட்டங்களில்
பேச்சுவார்த்தை தொடர இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்வு செய்யப்படும் நிர்வாகிகளின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் மட்டுமே எனவும், கட்சி விதிகளின்படி கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இழுபறி உள்ள மாவட்டங்களில் பதவிகள் தேர்தல் மூலமாகவும் , மற்ற மாவட்டங்களில் ஒருமனதாகவும் நியமிக்கப்பட உள்ளது.
குறிப்பாக ரசிகர் மன்றம், மக்கள் இயக்கம், தமிழக வெற்றிக்கழகம் என ஆரம்பம் முதலே பணி செய்து வரும் நபர்களுக்கு எந்த சமரசமுமின்றி பதவி வழங்க வேண்டும் என
தவெக தலைவர் விஜய் வலியுறுத்திருப்பதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தேர்வு மற்றும் நியமனம் விரைவில் இறுதி வடிவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.