மத்தியில் ஆட்சிக்கு சிக்கல் ஆரம்பம்.. எதிர்க்கட்சிக்கு இவ்ளோ பவரா? - அன்றே கணித்த பிரதமர்.. வைரலாகும் பழைய வீடியோ
மணிப்பூர் கலவரம் தொடர்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், 2019ல் பிரதமர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.
மணிப்பூர் கலவரம் விஸ்வரூபம் எடுத்ததையடுத்து, இவ்விவகாரம் மழைக்கால கூட்டத்தொடரில் எதிரொலிக்கும் என கணிக்கப்பட்டது. அதன் படியே மக்களவையில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதத்தை தொடங்க.. பல கட்ட போராட்டங்களை எதிர்க்கட்சிகள் முன்னெடுத்தன.
ஆனால் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தல்களை கண்டுகொள்ளாத ஆளும் பாஜக எவ்விதத்திலும் செவி சாய்க்கவில்லை.
ஆளுங்கட்சி மக்களுக்கு எதிராகவோ அல்லது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராகவோ செயல்படுவதாக கருதும் போது, எதிர்க்கட்சியோ அல்லது எதிர்க்கட்சி கூட்டணியோ நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரலாம்.
சபாநாயகர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதிக்கும் பட்சத்தில் அதற்கான தேதியும் நேரமும் அவரே நிர்ணயிப்பார். மக்களவையின் 198 விதிகளின் கீழ், சபாநாயகர் அழைப்பு விடுத்த பின்னர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்த உறுப்பினர் முதலில் பேசுவார்.
பின்னர் ஆளும் கட்சி தரப்பு இதற்கு ஒரு விளக்கமளித்து தனது நிலைப்பாட்டை விளக்கும். எதிர்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் இதன் மீது கேள்வி எழுப்பி கருத்துக்களை கூறுவார்கள்.
அனைத்து தரப்பு விவாதத்திற்கு பிறகு மக்களவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இதில் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால், ஆளுங்கட்சி ராஜினாமா செய்ய வேண்டும்.
ஒருவேளை தீர்மானத்திற்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனால், ஆளும் அரசு வெற்றி பெற்றதாகவும், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாகவும் அறிவிக்கப்படும்.
ஆட்சியை உலுக்கும் சக்தி படைத்த, நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீசை காங்கிரஸ் சார்பில், கவுரவ் கோகாய் கொண்டு வந்தார். அதனை சபாநாயகர் ஏற்றுள்ள நிலையில், இதுகுறித்து விரைவில் விவாதிக்கப்படும்.
இந்நிலையில் 2019ல் பிரதமர் மோடி பேசிய வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. 2019ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது பேசிய பிரதமர் மோடி, பாஜக அரசு மீது வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்தது சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார்.
சேவை உணர்வால் 2 உறுப்பினர்களாக இருந்த நாங்கள் இங்கே ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம். ஆணவத்தின் விளைவால் 400 இடங்களில் இருந்த நீங்கள் 40 ஆக குறைந்துள்ளீர்கள். இன்று நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்று பாருங்கள் என பேரவையில் இருந்த பாஜகவினர் சிரிப்பலையில் திளைக்க காங்கிரஸ் கட்சியை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
மேலும், தனது வாழ்த்துக்களை எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்க விரும்புவதாக கூறிய மோடி, 2023ல் மீண்டும் ஒரு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் தயாராகுங்கள் என எதிர்க்கட்சியை நோக்கி தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பகிர்ந்து வரும் பாஜகவினர், தற்போது மணிப்பூர் சம்பவம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து அன்றே கணித்தார் பிரதமர் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.