கூட்டணியில் விரிசலா? தொண்டர்களுக்கு திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்பு
கட்சி சார்பற்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிப்பது திட்டமிட்ட சூது, சனாதன சூழ்ச்சி என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில்,வரும் டிசம்பர் 6ம் தேதி
அம்பேத்கர் நினைவுநாளன்று "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" என்னும் நூல்வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாகவும், அவ்விழாவில் அரசியல் சாயம்பூசி நம்மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்க சதிதிட்டம் தீட்டி, நமது கூட்டணியின் உறுதித்தன்மையை பரிசோதித்துப் பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏற்கனவே ஒரு கூட்டணியில் இடம் பெற்று தொடர்ந்து வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கிறபோது, நாம் இன்னொரு கூட்டணிக்குப் போவதற்கோ அல்லது புதிய கூட்டணியை உருவாக்குவதற்கோ என்ன தேவை எழுந்துள்ளது? என்றும் வினவியுள்ளார்.
திமுக உள்ளிட்ட தோழமைகளோடு கைகோர்த்து நாமே உருவாக்கிய "மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் இந்தியா கூட்டணி" ஆகியவற்றை நாம் ஏன் சிதறடிக்க வேண்டும்? - இது நம்மை மிக மிகப் பலவீனமானவர்களாகக் மதிப்பீடு செய்வோரின் நஞ்சு நிறைந்த மிகவும் கேடான ஒரு மனோநிலையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுக் கருத்து அல்லது முரண்பாடான நிலைப்பாடு கொண்ட இன்னொரு கட்சியின் தலைவரோடு ஒரு நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்பதாலேயே நாம் அணி மாறிவிடுவோம் என்பது என்ன வகையான உளவியல்? -
திட்டமிட்டே நம்மீது அய்யத்தை எழுப்புவோர் திமுகவுக்கு மட்டுமல்ல; விசிகவுக்கும் நமது கூட்டணிக்கும் பகையானவர்களேயாகும் என்றும் திருமாவளவன் கூறியுள்ளார். அத்தகைய நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும், தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக்கூடாது -
தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்! என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.