அமைச்சர் டூ துணை முதலமைச்சர் - அரசியல் அங்கமான உதயநிதி

அமைச்சர் டூ துணை முதலமைச்சர் - அரசியல் அங்கமான உதயநிதி
x

ஹாட்ரிக் வெற்றி - 3வது முறையாக ஆட்சியமைத்த பாஜக

2024 தேர்தலிலும் வெற்றிப் பெற்று ஹாட்ரிக் வெற்றியுடன் ஆட்சி அமைத்தது பாஜக...கேரளாவில் தடம் பதித்து தென்னிந்தியாவில் காலூன்றியிருந்தாலும், உத்தரபிரதேசத்தில் பல தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி கொத்தி சென்றதும், எதிர்பார்த்த தொகுதிகளில் தோல்வியை தழுவியதும், 2024 தேர்தல் பாஜகவிற்கு புகட்டிய பாடம்.

அதிர வைத்த ஆட்சி மாற்றங்கள் - மகுடம் சூடிய சந்திரபாபு நாயுடு

ஆந்திர முதலமைச்சராக தான் மீண்டும் சட்டப்பேரவைக்குள் வருவேன் என சபதமேற்ற சந்திரபாபு நாயுடு, தேர்தலில் வெற்றி பெற்று கம்பேக் கொடுக்க, தேசிய அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்தது அரசியலின் உச்சப்பட்ச நிகழ்வு. அத்துடன் துணை முதலமைச்சராக பவன் கல்யாண் தேர்வானதும் ஆந்திர அரசியலின் திருப்புமுனை என்றே சொல்லலாம்..

அதே வேளையில், வி கே பாண்டியனை முன்நிறுத்தி தேர்தல் களம் கண்ட நவீன் பட்நாயக்-ன் 24 ஆண்டுகால ஆட்சி ஒடிசாவில் முடிவுக்கு வந்ததும் இந்த ஆண்டின் பரபரப்பு..

தேர்தல் அரசியலில் பிரியங்கா காந்தி - காய் நகர்த்திய காங்கிரஸ்

வயநாட்டில் வெற்றியை பதித்த ராகுல் காந்தி, அங்கு தனது சகோதரியை எம்.பி.யாக்க மேற்கொண்ட முயற்சியின் விளைவு தான் வயநாட்டில் நடந்து முடிந்த தேர்தல். காங்கிரஸ் ஆதரவாளர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்து, எம்.பி.யான பிறகு பிரியங்காவின் முதல் பேச்சும் மக்களவையில் ஓங்கி ஒலித்தது.


கிடைத்தது ஜாமின் - விடுதலையானதும் அமைச்சரான செந்தில் பாலாஜி

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஜாமின் கிடைத்தது. 470 நாட்கள் காத்திருப்புக்கு பின் விடுதலையான அவருக்கு, மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

கெஜ்ரிவால் கைதும், ஜாமினும் - தலைநகரை அதிர வைத்த சம்பவம்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதானது தலைநகர் அரசியலில் எதிர்பாராத அதிரடி. கைதானவரின் திகார் சிறை திகிலும், ஜாமினுக்கான போராட்டமும் நீண்டுக் கொண்டே போக...அதிகாரம் அதிஷி கையில் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார்.

அடிதடியில் அதிமுக - பொதுக்குழு, கள ஆய்வுக்கூட்டத்தில் சம்பவம்

மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் அதிமுகவிற்கு பெரும் பின்னடைவானது கள ஆய்வுக் கூட்ட அடிதடி. நெல்லை, மதுரை கள ஆய்வுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த இச்சம்பவங்கள் அதிருப்தியை ஏற்படுத்த உட்கட்சி பூசல்களை களைய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது அதிமுக தலைமை... அதேநேரம் வருடத்தின் இறுதியின் நடந்த பொதுக்குழுவும் அரசியல் ரீதியாக கவனம் பெற்றது.

ஆட்சியில் பங்கு ? - விசிகவும், கூட்டணி பஞ்சாயத்தும்

ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு கோஷம் விசிகவை விடாது துரத்தி வருகிறது இந்த ஆண்டில். தேர்தலுக்கு பின் இந்த கோஷத்தின் தாக்கம் தணிந்திருந்தாலும், புத்தக வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு விசிகவில் பரபரப்பை கிளப்பியது.. சஸ்பெண்ட்டில் ஆரம்பித்த பிரச்சினை இப்போது விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜூனா வெளியேறியது வரை ஒரே பரபரப்பு தான்..

தமிழ்த்தாய் வாழ்த்து வரிகள் நீக்கம் - ஆளுநர் அதிரடி

ஆளுநர் மற்றும் ஆளுங்கட்சிக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்கதையாகி விட்ட சூழலில், ஆளுநர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடம் என்ற சொல்லை நீக்கி பாடியது பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது. விளக்கங்களை முன்வைத்த போதிலும் தீர்வை நோக்கி செல்லாமல் இருக்கிறது ஆளுநர் ஆளுங்கட்சி விவகாரம்...


விஜய்யின் அரசியல் விஜயமும்...முதல் மாநாடும்...

சினிமாவில் மறைமுக அரசியல் பேசி வந்த விஜய், இந்தாண்டு நல்ல நேரம் பார்த்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அரசியல் களத்தில் முக்கிய நிகழ்வுகளுக்கு எக்ஸ் தள ட்வீட் மூலம் அரசியல் பேசி வந்த அவர், விக்கிரவாண்டி வி சாலையில் முதல் மாநாடு நடத்தி கள அரசியலுக்குள் வந்து கவனம் பெறும் தலைவராகி உள்ளார்.


சாட்டையடி.. சபதம் - அண்ணாமலை அதிரடி

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை விவகாரத்தால், கொதித்து போன பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இனி செருப்பு அணியமாட்டேன் என சபதமெடுத்ததோடு, சாட்டையால் தன்னைத் தானே அடித்துக் கொண்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அத்துடன் 48 நாட்கள் விரதமிருந்து முருகனிடம் முறையிடப் போவதாகவும் பேசி பரபரப்பை பற்ற வைத்தார்...


Next Story

மேலும் செய்திகள்