2026-க்கு டிரெய்லர் ஈரோடு கிழக்கு..செந்தில்பாலாஜியை இறக்கும் திமுக? -போட்டு பாக்க தயாராகிறாரா விஜய்?
2026 சட்டப்பேரவை தேர்தலை நோக்கி வேலையில் தீவிரம் காட்டிய கட்சிகளை திரும்பி பார்க்க செய்திருக்கிறது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி..
தொகுதி எம்.எல்.ஏ. E.V.K.S இளங்கோவன் இறப்பால், மீண்டும் இடைத்தேர்தலை நோக்கி பரபரக்கிறது உள்ளூர் அரசியல் களம். 2011-ல் புதிதாக உருவாக்கப்பட்ட ஈரோடு கிழக்கு 5 ஆவது தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறது. டெல்லி தேர்தல் அறிவிப்போடு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தொகுதி களத்தை பார்த்தால் கொங்கு மண்டலத்தில் பலத்தை காட்ட திமுகவும், அதிமுகவும் குஸ்திக்கு தயாராவதாகவே தெரிகிறது. 2021 தேர்தலில் கைக்கொடுக்காத கொங்கு மண்டலத்தை ஸ்பெஷலாக கவனிக்கும் திமுக, 2026 தேர்தலுக்கு முன்பாக பலத்தை காட்ட விரும்புவதாக கூறப்படுகிறது.
இதனால் திமுக நேரடியாக போட்டியிடுகிறதா? என்ற கேள்விக்கு அப்படிதான் இருக்க வேண்டும் என்பது உள்ளூர் திமுகவினர் மற்றும் சீனியர்கள் ஆசை என சொல்லப்படுகிறது.
ஆனால், அறிவாலயம் கூட்டணியில் யாருக்கு முதலில் தொகுதி கொடுக்கப்பட்டதோ அவர்களுக்கே மீண்டும் தொகுதி என சொல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. நாங்கதான் போட்டி என சொல்லிவிட்டார் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை.......
காங்கிரசில் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், இளைஞரணி நிர்வாகி ராஜேஷ் செல்லப்பா, முன்னாள் எம்எல்ஏ ஆர்எம் பழனிச்சாமி ஆகியோருக்கு வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது.
மீண்டும் மாஸ் காட்ட விரும்பும் திமுக, கொங்குவில் அதிமுகவுக்கு செக் மேட்டாக பார்க்கும் செந்தில் பாலாஜியை மீண்டும் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் கொங்கு எங்கள் கோட்டை... இது எங்க ஏரியா என சொல்லிவரும் அதிமுக தனது செல்வாக்கை காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 2023 இடைத்தேர்தலில் கடும் போட்டியில் டெபாசிட்டை தக்க வைத்தது அதிமுக.. பாஜகவால்தான் அதிமுகவுக்கு பின்னடைவு என பலரும் புலம்பிய வேளையில், இப்போது கூட்டணியில் பாஜக இல்லாததால் உள்ளூர் அதிமுகவினர் குஷி என்றும் சொல்லப்படுகிறது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நியாயமாக தேர்தல் நடைபெறாது என போட்டியிலிருந்து விலகிக் கொண்டது அதிமுக.
ஆனால் கொங்குவில் அப்படி முடியாது என சொல்லப்பட்ட வேளையில் அதிமுகவும் விலக விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. 2026 தேர்தலுக்கு கூட்டணிகளை வசீகரிக்கவும், தொண்டர்களையும் குஷியாக்கும் வகையிலும் இரட்டை இலைக்கு செல்வாக்கு கொண்ட பகுதியில் செல்வாக்கை காட்ட அதிமுக தயாராவதாக சொல்லப்படுகிறது.
இருப்பினும் கட்சியில் 2026 தேர்தலில் போட்டியிடவே விருப்ப பட்டியல் நீள்வதாக தெரிகிறது. இந்த சூழலில் அதிமுகவில் மீண்டும் தென்னரசுக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக கேம்ப்பை பொறுத்தவையில் இடைத்தேர்தலில் போட்டியிடவும் ஆர்வம் காட்டாது, எந்த பரபரப்பும் இல்லாது அமைதியாக இருக்கிறது. மறுபுறம் நாங்க இல்லாமையா என கோதாவுக்கு தயாராகிவிட்டது நாம் தமிழர் கட்சி.......
இதற்கிடையே புதியதாக கட்சி தொடங்கிய விஜய் என்ன செய்யப்போகிறார்? தவெக தலை தேர்தலை ஈரோடு கிழக்கில் தொடங்குமா? என்ற எதிர்பார்ப்பும் அரசியல் களத்தில் நிலவுகிறது. அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை எகிறச் செய்திருக்கும் விஜய், எம்.ஜி.ஆர். ரூட்டில் பயணிப்பாரா? இல்லை தனி ரூட்டில் பயணிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எம்.ஜி.ஆர். தனிக்கட்சி ஆரம்பித்த போது, 1973-ல் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிக்கணக்கை தொடங்கினார். அதேபோல் விஜய் பயணத்தை தொடங்குவாரா? என கேட்டால் அண்ணன் 2026 தேர்தல்தான் டார்க்கெட் என சொல்லிவிட்டார் என சொல்கிறது கட்சி வட்டாரங்கள்................
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக பலத்தை காட்ட திமுகவும், அதிமுகவும் ஆர்வம் காட்டுவதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எப்போதும் இல்லாத பரபரப்பு இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது. .....