நாட்டின் பல முக்கிய தலைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் நாளை-யார் பக்கம் வீசும் மக்கள் அலை?
2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்ததை தொடர்ந்து 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது
18 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், முதல்கட்டமாக 102 தொகுதிகளில் கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக 2 ஆம் கட்ட தேர்தல் நடைபெறும் 88 தொகுதிகளில் பிரசாரம் சூடுபிடித்தது. பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மம்தா பானர்ஜி என தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் செல்வங்களை அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிக்க திட்டமிடுவதாக குற்றம் சாட்டியது சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது பெண்கள் புனிதமாக பார்க்கும் மாங்கலயத்தை கூட காங்கிரஸ் விட்டு வைக்காது என காட்டமாக விமர்சித்தார்.
இஸ்லாமியர் மற்றும் தாலி குறித்து பிரியங்கா பதிலடியை கொடுக்க இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் அனல் தெரித்தது. நேற்று மாலையோடு இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது, அங்கு நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதிகப்பட்சமாக அண்டைய மாநிலமான கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், ராஜஸ்தானில் 13 தொகுதிகளிலும், உத்தரபிரதேசத்தில் 8 தொகுதியிலும், மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. பீகாரில் 5 தொகுதிகளிலும், அசாமில் 5 தொகுதிகளிலும், சத்தீஷ்காரில் 3 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளிலும், ஜம்மு காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் மூத்த தலைவர் சதிதரூர் போட்டியிடும் கேரளாவின் திருவனந்தபுரம் தொகுதி, நடிகை ஹேமமாலினி போட்டியிடும் உத்தரபிரதேசத்தின் மதுரா தொகுதியிலும், ராமாயணம் நடிகர் அருண் கோவில் போட்டியிடும் மீரட் தொகுதியிலும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.
சத்தீஷ்காரில் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகல் போட்டியிடும் ராஜ்நந்த்கான் தொகுதி, கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி போட்டியிடும் மாண்டியா தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ராஜஸ்தானில் மக்களவை சபாநாயக ஓம் பிர்லா போட்டியிடும் கோடா தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.