"காப்பாற்று காப்பாற்று".. அவையில் எழுந்த முழக்கம்.. "எதிர்கட்சி அனைவரும் ராமர் விரோதிகள்".. நாடாளுமன்றத்தில் பரபரப்பு

x

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கடைசி நாளான இன்று காலை மக்களவை கூடிய உடனே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட விவகாரத்தை முன்வைத்து திமுக எம்பிக்கள் அவையில் முழக்கங்களை எழுப்பினர். "காப்பாற்று காப்பாற்று தமிழக மீனவர்களை காப்பாற்று" என தமிழிலும் ஆங்கிலத்திலும் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தமிழக மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை முறையான பதில் வரவில்லை என குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் இன்றைய அலுவலை ஒத்தி வைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இன்று ராமர் கோவில் குறித்து அவையில் விவாதம் நடைபெற உள்ளது என்றும், கேள்வி நேரமும் பூஜ்ய நேரமும் நடைபெறாது எனவும் தெரிவித்ததுடன், எந்த விதமான ஒத்திவைப்பு தீர்மானங்களும் ஏற்கப்படாது என்றும் குறிப்பிட்டார். இருப்பினும் இப்பிரச்சினை அவையில் பதிவாகிவிட்டது என அவர் தெரிவித்த நிலையில், தங்களுடைய கோரிக்கை ஏற்கப்படாததை கண்டித்து திமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து மக்களவையில் விதி எண் 193ன் கீழ் ராமர் கோவில் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது. திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்த போது அவர்கள் ராமர் விரோதிகள் என்பதால் சென்று விட்டதாக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்