"படித்துவிட்டு டெல்லி வாங்க.." நிர்மலா சீதாராமனுடன் வாக்குவாதத்தில் இறங்கிய இளைஞர்.. திடீரென்னு டென்ஷனான மத்திய நிதி அமைச்சர்
கோவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் இளைஞர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சூலூர் ஊஞ்சபாளையம் பகுதியில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கியவர், காங்கிரசையும், தி.மு.க.வையும் விமர்சித்தார். தமிழகத்தில் ஒரு குடும்பம் மட்டுமே வளர வரிப்பணம் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து, பொது மக்களை வீட்டில் சந்தித்து அவர்களுக்கு பா.ஜ.க. உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கினார். அப்படி சென்ற வழியில் அருண் சந்திரன் என்ற இளைஞர், செமி கண்டக்டர் உதிரிபாகத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வது ஏன்? என கேள்வி எழுப்பினார். ஆவேசமான நிர்மலா சீதாராமன், அரசு குறிப்புகளை படித்து விட்டு டெல்லி வாங்க... விவாதிக்கலாம் என்று பதில் கொடுத்தார். தொடர்ந்து கேள்விகளை எழுப்பிய இளைஞரை, இவ்வாறு கேட்கக்கூடாது என எச்சரித்தனர். தொடர்ச்சியாக அங்கிருந்த போலீசார், இளைஞரை அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.