``இந்த மோடி உயிரோடு இருக்கும் வரை அது நடக்காது'' - நரம்பு புடைக்க கத்திய மோடி.. அமித் ஷா கேட்ட அதிர்ச்சி கேள்வி

x

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. இதுகுறித்த ஒரு தொகுப்பு உங்கள் பார்வைக்கு... மகாராஷ்டிரா மாநிலம் துலேயில் பாஜகவுக்கு வாக்கு சேகரித்தார் பிரதமர் மோடி... காங்கிரஸ் கூட்டணி சக்கரங்கள், பிரேக் இல்லாத வாகனம், அந்த வாகனத்தில் டிரைவராக இருப்பது யார் என்று சண்டை வேறு நடக்கிறது என விமர்சித்தார்.

காங்கிரஸ் கூட்டணியில் ஒற்றை நோக்கம் மக்களை கொள்ளையடிப்பது மட்டுமே எனவும் சாடினார்.

தொடர்ந்து நாசிக்கில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, சந்திரபதி சிவாஜி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

காஷ்மீரில் தேசிய மாநாட்டு காங்கிரஸ் கட்சி, மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-யை திரும்பக் கொண்டுவருவதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இதனை பிரசாரத்தில் எழுப்பிய பிரதமர் மோடி... காங்கிரஸ் காஷ்மீரில் செய்யும் சதிகளை மகாராஷ்டிரா பார்க்கலாம்... இந்த தேசம் 370 சட்டப்பிரிவு தொடர்பான தீர்மானத்தை ஏற்காது என்றார். மோடி இருக்கும் வரையில் காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் எதையும் செய்ய முடியாது என்றவர், அம்பேத்கரின் அரசியலமைப்பே காஷ்மீரில் இருக்கும், உலகின் எந்த சக்தியாலும் சட்டப்பிரிவு 370-யை திரும்ப கொண்டுவர முடியாது என்றார்.

அரசியலமைப்பு, நீதிமன்றங்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை பற்றி எல்லாம் காங்கிரசுக்கு அக்கறை கிடையாது, வெற்று சீனுக்காகவே அரசியலமைப்பை பாக்கெட்டில் எடுத்துச் செல்கிறார்கள் என்று விமர்சித்தார் பிரதமர் மோடி.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மகாராஷ்டிராவில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். சாங்கிலியில் பிரசாரம் செய்த அமித்ஷா, அரியானாவில் காங்கிரஸ் தோற்றது போல் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி தோற்கும் என்றார். இச்சால்கராஞ்சியில் பிரசாரம் செய்த அமித்ஷா, மகாராஷ்டிரா சிவாஜி மகாராஜா பாதையில் செல்ல வேண்டுமா...? அவுரங்கசிப் பாதையில் செல்ல வேண்டுமா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே புனேவில் பிரசாரம் செய்தார். மும்பையில் மும்பாதேவி தொகுதியில் பாஜகவிலிருந்து சிவசேனா ஷிண்டே அணிக்கு தாவிய சாய்னா என்.சி.க்கு ஆதரவாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பிரசாரம் செய்தார். அப்போது அங்கிருக்கும் மும்பா தேவி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

பிரசாரங்களுக்கு மத்தியில் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே பதில் கொடுத்தார்.

வரலாற்றை பேசுவதற்கு பதிலாக, பாஜக மகாராஷ்டிராவை கொள்ளையடித்தது ஏன்...? என்பதற்கு மோடி பதில் சொல்லட்டும் என்றார். இங்குள்ள இளைஞர்களுக்கு பாஜக வேலைவாய்ப்பு அளிக்காதது ஏன்...? அதனை குஜராத்திற்கு கொண்டு செல்வது ஏன்...? என்பதற்கு பதில் சொல்லட்டும் என ஆதித்யா தாக்கரே மோடிக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சிம்தேகாவில்பிரசாரம் செய்த ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி அரசியலமைப்பை பாதுகாப்பதாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பாஜகவும் அரசியலமைப்பை ஒழிக்க விரும்புவதாகவும் குற்றம் சாட்டினார். 25 செல்வந்தர்களின் 16 லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்த மோடி அரசாங்கம் வி வசாயிகள் கடனை தள்ளுபடி செய்யவில்லை என விமர்சித்த ராகுல் காந்தி, பாஜக 2,3பேரை வைத்து ஆட்சி செய்ய விரும்புகிறது என்றார்.

ஜார்க்கண்ட் முதல்வர் கேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். ஜார்க்கண்டில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர். தேர்தல் நெருங்க இரு மாநிலங்களிலும் பிரசாரம் களைக்கட்டி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்