இந்திரா காந்தியால் 3வது மகன் என வர்ணிக்கப்பட்டவரே தாவலா? `கை`யில் விழுந்த அணுகுண்டு
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சி தாவல்களால் தொடர்ந்து ஆட்டம் கண்டு வருகிறது, காங்கிரஸ் கட்சி. மகாராஷ்டிராவை தொடர்ந்து தற்போது மத்திய பிரதேசத்திலும் கட்சித் தாவலால் கலக்கமடைந்துள்ளது, காங்கிரஸ் கட்சி.
ஏற்கனவே இதற்கு முன்பு கட்சி தாவலால் கடந்த 2020 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் ஆட்சியையே இழக்கும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டதை மறப்பதற்கில்லை.
2018 ஆம் ஆண்டு அங்கு ஆட்சியைப் பிடித்திருந்த காங்கிரஸ் கட்சியால் 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 29 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
இந்த தேர்தலில் தோல்வியுற்ற மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் முகமாக அறியப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா, அடுத்த ஆண்டே தனது ஆதரவு 22 எம்எல்ஏக்களுடன் பாஜக பக்கம் தாவி காங்கிரசுக்கு பேரதிர்ச்சியை கொடுத்து, ஆட்சி மாற்றத்திற்கு காரணமாகினார்.
இதேபோல் தற்போது, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சந்தித்த தோல்வி காங்கிரஸ் கட்சியில் மீண்டும் கட்சித் தாவலுக்கு இடம் கொடுத்திருப்பதாக தெரிகிறது.
கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில், 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் 163 இடங்களை பிடித்து பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், 2018 ஆம் ஆண்டு 114 இடங்களை கைப்பற்றி இருந்த காங்கிரஸ் கட்சி வெறும் 66 இடங்களுக்குள் சுருங்கியது.
காங்கிரஸின் இந்த தோல்விக்கு காரணம், அம்மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத்தின் தன்னிச்சியான செயல்பாடுகள் தான் என்று அப்போது குற்றச்சாட்டப்பட்டது. இதனால் கமல்நாத் மீது அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் மேலிடம், அவரை மாநில தலைவர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கியது.
இப்படி ஏற்கனவே கட்சியின் மேலிடம் மீது வருத்தத்தில் இருந்த மத்திய பிரதேசத்தின் காங்கிரஸ் முகமாக அறியப்படும் முன்னாள் முதலமைச்சர் கமல்நாத், கட்சி மேலிடம் தன்னை ராஜ்யசபா எம்பி வேட்பாளராக முன்நிறுத்தும் என்ற எதிர்பார்ப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இன்னொரு புறம், கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கமல்நாத்தின் கோட்டையாக கருதப்படும்
சிந்த்வாரா மக்களவை தொகுதியில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது. சிந்த்வாரா தொகுதி எம்பி யாக இருப்பவர் கமல்நாத்தின் மகன் நக்குல்நாத்.
இந்நிலையில், இன்னும் காங்கிரஸ் மேலிடம் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், தன்னை மீண்டும் சிந்த்வாரா தொகுதி வேட்பாளராக அறிவித்துக்கொண்டு, தேர்தல் வேலையில் நக்குல்நாத் இறங்கியது காங்கிரசை அதிருப்தி அடைய செய்தது.
இப்படி கமல்நாத்திற்கும், காங்கிரஸுக்கும் இடையேயான உறவு கடந்த சில நாட்களாகவே கசந்து வந்த நிலையில், பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த அதே நேரத்தில் கமல்நாத் மேற்கொண்ட டெல்லி பயணம் மற்றும் அவரது மகன் நக்குல்நாத் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து காங்கிரஸ் பெயரை நீக்கியது.. பாஜக பக்கம் கட்சித்தாவ இருக்கிறார் கமல்நாத் என்ற பேச்சு எழ காரணமாகியது.