2026 நெருங்க நெருங்க விஸ்வரூபம் எடுக்கும் ஈபிஎஸ்.. உக்கிரமாக மாறும் களம்

x

"எடப்பாடி பழனிசாமியா? எரிச்சல் சாமியா?" - தாக்கும் அமைச்சர்.. 2026 நெருங்க நெருங்க விஸ்வரூபம் எடுக்கும் ஈபிஎஸ்.. உக்கிரமாக மாறும் களம்

திமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா?, மக்கள் உயிரை பறிக்கும் துறையா என சந்தேகம் எழுந்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மருத்துவ துறையில் நிகழ்ந்து வரும் விரும்பத்தகாத நிகழ்வுகளை எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பலமுறை சுட்டிக்காட்டி வருவதாக கூறியுள்ளார்.

அவைகளை தீர்த்து வைக்காமல், எனக்கு முரண்பாடான பதில்களை அளிப்பதிலேயே அமைச்சர் மா.சுப்பிரமணியன் குறியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். குழந்தையின் தொப்புள் கொடியை சட்ட விரோதமாக அறுத்த யூ டியூபர் இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்ன அமைச்சர் மா. சுப்பிரமணியன், இர்பான் அமைச்சர் உதயநிதியுடன் நெருக்கமாக உள்ளதை தெரிந்துகொண்ட பின் அப்படியே பம்மி பதுங்கி விட்டதாக கூறியுள்ளார். அதோடு, இது ஒரு கொலை குற்றமா? என அமைச்சர் கேள்வி எழுப்பியது மக்களை அதிருப்தி அடைய செய்திருப்பதாக தெரிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் சாதனை துறையாக இருந்த மருத்துவ துறை, திமுக ஆட்சியில் சர்ச்சை துறையாக மாறி விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியா? எரிச்சல்சாமியா? என்ற அளவுக்கு மருத்துவ நல்வாழ்வுத்துறை மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவதூறு பரப்புவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டி உள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவ திட்டங்களை பட்டியலிட்டுள்ளார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டம் ஐ.நா. சபையில் பாராட்டு பெற்று விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாங்கள் செய்ய நினைக்கும் அற்ப அரசியலுக்காக, ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி, குளிர் காய நினைக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார். எதையும் புரியாமல் அறியாமல் அறிக்கை வெளியிடுவதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி, எரிச்சல் சாமியாக மக்களுக்கு காட்சி அளிப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்