யார் இந்த பெ.சண்முகம்.. எத்தனை ஆண்டு CPM கட்சியில் பயணிக்கிறார்? - முழு அரசியல் வரலாறு

x

யார் இந்த பெ.சண்முகம்.. எத்தனை ஆண்டு CPM கட்சியில் பயணிக்கிறார்? - முழு அரசியல் வரலாறு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விவசாயிகள், பழங்குடியினருக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவராக அறியப்படும் அவரை பற்றி விவரிக்கிறது பின்வரும் தொகுப்பு...

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பெருவளநல்லூரில் 1960ஆம் ஆண்டு பிறந்த பெ.சண்முகம், தனது கல்லூரி காலத்திலேயே புரட்சிகர செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு மாணவர் சங்கத்தில் இணைந்தார்.

அப்போதிருந்தே ‌மாணவர் தலைவராக தீவிர அரசியலில் இயங்கிய அவர், பின்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக செயல்பட்டார்.

1992ஆம் ஆண்டு உருவான மலைவாழ் மக்கள் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராக தேர்வான பெ.சண்முகம், தமிழக வரலாற்றில் கரும்புள்ளியாக இருக்கும் வாச்சாத்தி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கான போராட்டத்தை, 30 ஆண்டுகள் வழிநடத்தி வென்று காட்டிய தலைவர்களில் முக்கியமானவர்...

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக 13 ஆண்டுகள், மாநில தலைவராக ஏறக்குறைய 4 ஆண்டுகள் என பொறுப்பில் இருந்த காலத்தில் அவர் களமாடிய போராட்டங்கள் ஏராளம்...

குறிப்பாக, பழங்குடி மக்களின் சாதிச்சான்று‌ கோரிய போராட்டங்களிலும், அனைத்து விதமான‌ நிலவுரிமை போராட்டங்களிலும் இவர் முன்ணனியில் நின்றார்.

பழங்குடியினர் நிலவுரிமை போராட்டத்தை முன்னெடுத்து, கடந்த 2006-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை இவர் சந்தித்த பின்னரே, வரலாற்றுச் சிறப்புமிக்க வனவுரிமை சட்டம் சாத்தியமானதாக சொல்லப்படுகிறது.

2021-ல் ஒட்டு மொத்த நாட்டையும் திரும்பி பார்க்க செய்த வரலாற்று சிறப்புமிக்க டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு, தமிழ்நாட்டிலிருந்து பல்லாயிரம் விவசாயிகளை தலைமையேற்று பெ.சண்முகம் வழிநடத்தி இருக்கிறார்.

அதன் தொடர்ச்சியாகவே, தற்போது விழுப்புரத்தில் நடைபெற்ற 24 வது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில், அக்கட்சியின் மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வாகியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்