இயற்கை உபாதை கழிக்க சென்ற கோவை கவுன்சிலர்.. நொய்யல் ஆற்றில் சடலமாக மீட்பு - நடந்ததை அப்படியே சொன்ன நண்பர்கள்
கோவை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் நொய்யல் ஆற்று பள்ளத்தில் தவறி விழுந்து அவர் உயிரிழந்தாரா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 56-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலராக இருந்த இவர், நொய்யல் ஆற்றின் பள்ளத்தில் சடலமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சடலத்தை மீட்ட சூலூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி காரில் சென்றதாகவும், நொய்யல் ஆற்று பாலத்தின் அருகே இயற்கை உபாதையை கழிப்பதற்காக நின்றபோது, தவறி ஆற்றில் விழுந்து பாறையில் அடிபட்டு அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி மது அருந்தியிருந்ததாகவும் கூறப்படும் நிலையில், இது தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்கு காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.