CM ஸ்டாலின், பொன்முடிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி - ``ரூ. 1 லட்சம்'' - ஹைகோர்ட் அதிரடி

x

முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 1996 - 2001 திமுக ஆட்சியில் சென்னையில் பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதில்115 கோடி ரூபாய் கோடிக்கு முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. விவகாரத்தில் 2001-ல் அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், வழக்கை தொடர அனுமதியளித்த உத்தரவை சபாநாயகர் திரும்பப்பெற்றதால் வழக்கு கைவிடப்பட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து, முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கை விசாரிக்க உத்தரவிட கோரி கோவையை சேர்ந்த தொழிலதிபர் மாணிக்கம் அத்தப்ப கவுண்டர் மனுத்தாக்கல் செய்தார். விசாரணையின் போது, சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர முடியுமா? என கேள்வியை எழுப்பியிருந்த நீதிமன்றம், 15 - 20 ஆண்டுகளுக்கு முன் எடுத்த முடிவை எதிர்த்து தற்போது வழக்கு தொடர முடியுமா? எனவும் கேள்வி எழுப்பியது. மனுதாரர் தனது நேர்மைத்தன்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாயை டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டது. தற்போது வழக்கை திரும்பப்பெற மனுதாரர் அனுமதி கோரியதால், அதை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், வழக்கை திரும்பப்பெற அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்தது. மனுதாரர் டெபாசிட் செய்த தொகையை திருப்பி அளிக்கவும் உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்