முன்னாள் அமைச்சர்கள் முன் நடந்த அடிதடி சண்டை..அதிமுக நிர்வாகிக்கு விழுந்த தர்ம அடி.. | AMDK

x

மதுரை மாநகர அதிமுக செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து கள ஆய்வுக் கூட்டம் சந்தைப்பேட்டையிலுள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், செம்மலை, செல்லூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை, கட்சி வளர்ச்சிப்பணிகள் குறித்து கேட்டறிந்தனர். நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை ஆகியோரிடம் தங்களுடைய கருத்துக்களையும் கேட்க வேண்டும் என அதிமுகவை சேர்ந்த பைக்காரா செழியன், வைகை பாலன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மேடையில் ஏறி பேசிய நிலையில் ஆத்திரமடைந்த செல்லூர் ராஜுவின் ஆதரவாளர்கள் சிலர் மேடையை விட்டு கீழே இறங்குமாறு கூறினர். இதை எடுத்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அடிதடி, கைகலப்பாக மாறியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், செம்மலை உள்ளிட்டோர் சமாதானம் செய்ததை தொடர்ந்து மேடையில் அமர்ந்திருந்த டாக்டர் சரவணனுக்கு எதிராக சிலர் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர், "என்ன நடந்தது என்று எங்களுக்கே இன்னும் புரியவில்லை" என மேடையில் நத்தம் விஸ்வநாதன் சமாதானம் செய்து பேசுகையில், கட்சியை செயல்பட விடாமல் சிலர் தடுப்பதாக நிர்வாகிகள் கூச்சலிட்டனர். சம்பவத்தை கேள்விப்பட்டு அரங்கத்தின் உள்ளே வந்த காவல்துறையினரிடம் இது கட்சி விவகாரம் காவல்துறை இதில் தலையிட வேண்டாம் என நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். நெல்லை, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற கள ஆய்வு கூட்டங்களில் மாவட்ட நிர்வாகிகள் குழுக்களாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் மல்லுக்கட்டிய நிலையில், மதுரையிலும் அதேபோன்று நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்