மனித குலத்துக்கே பேராபத்து..! "ரத்தத்தில் கலந்தது பிளாஸ்டிக்..."மூளைக்கும், இதயத்திற்கும் குறி..?

x

எலிகளின் மூளைக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது தெரிய வந்திருப்பது, மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது...அதற்கு என்ன காரணம்? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

நம் கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ பிளாஸ்டிக்.. உயிருக்கு நஞ்சாவது குறித்து எத்தனை பேர் அறிந்திருப்பார்கள்...?

இதற்கு முன்பு தப்பி தவறி நாம் பிளாஸ்டிக்கை உட்கொண்டாலும், அது ரத்தத்தில் கலக்காமல் உணவு குழாய் வழியாக மலத்தில் வெளியேறி விடும் என நம்பப்பட்ட காலம் உண்டு.

ஆனால் அந்த நம்பிக்கையை உருக்குலைத்து மனித குலத்திற்கு எச்சரிக்கை கொடுத்திருந்தது கடந்த ஆண்டு வெளியாகி இருந்த அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று.

மனிதர்களின் ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த பேரதிர்ச்சிக்கு காரணம்.

இதனால் மனிதர்களின் ரத்தத்தில் இருக்கும் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் அவர்களின் மூளைக்கும், இதயத்திற்கும் செல்லுமா? இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகளால் எவ்விதமான நோய் பாதிப்புக்கு மனிதர்கள் ஆளாக நேரிடும்? என்பது உள்ளிட்ட என மனித குலத்தை அச்சுறுத்தும் பல கேள்விகள் அடுத்தடுத்து எழுந்தன?

இவற்றிற்கு விடை காண முயற்சித்து வரும் ஆராய்ச்சி யாளர்கள்... எலிகளிடம் மேற்கொண்ட ஆய்வில் தற்போது மற்றொரு அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

பிளாஸ்டிக் துகள்கள் கலந்த அசுத்தமான நீரை குடித்த எலிகளின் உடலில் மூளை, கல்லீரல், சிறுநீரகம், இதயம் குடல் என பல உறுப்பிலும் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது தெரியவந்துள்ளது. அதோடு எலியின் மலத்திலும் , சிறுநீரிலும் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது உறுதியானது.

இத்தனைக்கும் மிக சிறிய அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக்களையே எலிகள் உட்கொண்டிருந்தன. உட்கொண்ட மூன்று வாரத்திலேயே குறிப்பாக வயதான எலிகளில், மனிதர்களுக்கு ஏற்படும் ஞாபக மறதி போன்ற மூளை பாதிப்பு டிமென்ஷியா நோய் கண்டறியப்பட்டது தெரியவந்தது.

உலக அளவில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் நோய்கள் வரிசையில் டிமென்ஷியா 7வது இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதில் உடலின் மற்ற பகுதிகளுக்கும் நரம்பு மண்டலத்திற்கும் இடையிலான நோயெதிர்ப்புத் தடையை மீறி மூளைக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் நுழைந்து இருப்பது தான் பெரும் கவலை தரும் செய்தியாகி உள்ளது.

இந்த ஆய்வு, மைக்ரோ பிளாஸ்டிக் மனிதர்களை எந்த அளவிற்கு பாதிக்கலாம் என்பதை புரிந்து கொள்ள உதவுவதோடு, மூளைகளையே பாதிக்கும் அளவிற்கு மைக்ரோ பிளாஸ்டிக்கின் ஊடுருவல் இருப்பது எதிர்காலத்தில் மனித குலத்திற்கு பேராபத்தாக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்