முதலிடத்தில் நீடிப்பது யார்? போட்டி போடும் தமிழ்நாடு, மகாராஷ்டிரா - தமிழகத்தில் உள்ள டாப் 3 நிறுவனங்கள்
மின்சார வாகனங்கள் உற்பத்திக்கான முதலீடுகளை ஈர்ப்பத்தில் தமிழகமும், மகாராஷ்ட்ராவும் முன்னிலையில் உள்ளன. இதன் பின்னணி பற்றி இந்தத் தொகுப்பு அலசுகிறது.
கார்கள் உற்பத்தியில் சென்னை, இந்தியாவின் டெட்ராய்ட் என்று கருதப்படும் நிலையில், மின்சார வாகனங்கள் உற்பத்தியிலும், தமிழகம் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது.
2020 ஜனவரி முதல் 2023 ஜூன் வரை இந்தியாவில், மின்சார வாகனங்கள் உற்பத்தியில் மொத்தம் 2.36 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக சப்ரே ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.
இதில் தமிழகத்தில் 15 சதவீதமும், மகாராஷ்ட்ராவில் 15 சதவீதமும், கர்நாடகாவில் 11 சதவீதமும்,
குஜராத்தில் 8 சதவீதமும், உத்தர பிரதேசத்தில் 7 சதவீதமும், தெலங்கானாவில் 7 சதவீதமும் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன.
மின்சார இரு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் டாப் ௩ நிறுவனங்களான ஓலா எலக்ட்ரிக், ஏத்தெர் மற்றும் டி.வி.எஸ் மோட்டர் நிறுவனங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹூன்டாய் மோட்டர் இந்தியா மற்றும் ரெனால்ட் நிஸான் நிறுவனங்கள், தமிழகத்தில் மின்சார கார்கள் உற்பத்தியில் முதலீடு செய்துள்ளன.
2025ஆம் ஆண்டிற்குள், தமிழகத்தில் மின்சார வாகனங்கள் உற்பத்தியில் மொத்தம் 50,000 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2022 இறுதி வரை, இத்துறையில், தமிழகத்தில் 31,960 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள் உற்பத்தி துறையில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு பல்வேறு வரிச்சலுகைகளை அளித்து வருகிறது.
மாநில ஜி.எஸ்.டி வரியில் இருந்து 100 சதவீதம் விலக்கு அளிக்கப்படுகிறது.
தமிழக மின் வாரியத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்திற்கு 5 வருடங்களுக்கு மின்சார வரி விலக்கு அளிக்கிறது.
முதலீடுகளின் அளவு மற்றும் ஆண்டு விற்பனை அளவின் அடிப்படையில் மானியமும், மலிவு விலையில் நிலமும் அளிக்கிறது.