உலக வரைபடத்தில் இருந்தே மாயம் -இன்னொரு தனுஷ்கோடி பூஞ்சேரிமட்டம்..ஓர் இரவில் மியூசியத்திற்குள் சமாதி
வயநாட்டில் பசுமை சூழ காட்சியளித்த பூஞ்சேரிமட்டம் கிராமம், ஒரே ஒரு நிலச்சரிவால் இப்போது வரைபடத்தில் இருந்தே மாயமாகி இருக்கிறது. அங்கிருந்த மக்கள் எங்கே? வாழ்வாதாரம் என்னவாகும்? அலசுகிறது இந்த தொகுப்பு...
ஒரு நிலச்சரிவு இத்தனை பெரிய கோரத்தை நிகழ்த்த முடியுமா? என உலகத்தையே உலுக்கியிருக்கிறது வயநாடு...
சுற்றுலா வாசிகளின் சொர்க்கபுரியாக இருந்த இடங்கள் எல்லாம் இப்போது மனித சடலங்களுக்கு மத்தியில் பாறைகள், மண் குவியல்களாக காட்சியளிக்கும் கோலத்தை காண முடியவில்லை...
தோண்ட தோண்ட கைகளும், கால்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது... இவர் தான் என் மகன் என பெற்ற தாயால் கூட அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு சிதைந்து போன சடலங்கள்...
படித்த பள்ளி, இருந்த வீடு, உறவினர்கள் என அத்தனையையும் தொலைத்து விட்டு நிற்கும் மக்கள் என வயநாடு இன்னும் தன் துயரத்தை மறக்க நாட்கள் ஆகலாம்...
ஆனால் இந்த நிலச்சரிவால் பூஞ்சேரி மட்டம் என்ற ஒரு கிராமமே உருக்குலைந்து வரைபடத்தில் இருந்தே மாயமானதெல்லாம் இதுவரை யாரும் கேட்டிராத துயரம்...
சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களை பற்றி பேசிக் கொண்டிருக்கும் சூழலில் பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்து இன்னும் சடலங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன...
நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கையும் 400ஐ கடந்திருக்கும் சூழலில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்த வண்ணம் தான் இருக்கிறது...
இந்த சூழலில் பூஞ்சேரிமட்டம் என்ற கிராமமே நிலச்சரிவால் தன் தடயத்தை தொலைத்து நிற்பது கேரளாவை அதிர வைத்திருக்கிறது.. நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வந்த இந்த கிராமத்தில் இப்போது ஒரு வீடு கூட இல்லை.. அதிக உயிரிழப்புகளும் இந்த கிராமத்தில் தானாம்..
பசுமை போர்த்திய ஒரு இடமாக இருந்த இடத்தில் இப்போது பாறைகளும், கற்கள் குவியலுமாக காட்சி தருகிறது... கிட்டத்தட்ட தனுஷ்கோடி போல தன் தடத்தை தொலைத்துவிட்டு நிற்கிறது பூஞ்சேரிமட்டம் கிராமம்...
இயற்கையின் கோரத்தால் நடந்திருக்கும் இந்த துயரத்தை தொடர்ந்து பூஞ்சேரிமட்டம் கிராமத்தில் மக்கள் மீண்டும் குடியமர்த்த வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்படி என்றால் பூஞ்சேரிமட்டத்தில் இருந்தவர்கள் கதி என்ன? மண்ணுக்குள் புதைந்தவர்கள் எப்போது மீட்கப்படுவார்கள்? என்ற அடுத்தடுத்த கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.. இதை எல்லாம் பார்க்கும் போது இப்படி ஒரு துயரம் வேறு எங்கும் எப்போதும் நடக்கவே கூடாது என்றுதான் மனம் வேண்டுகிறது..