தேர்தல் விதிகளில் திருத்தம்... பாஜகவின் சதியா..? ``இனி இதை பார்க்க முடியாதா?'' கொதிக்கும் எதிர்க்கட்சிகள்
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி மோசடியாக வெற்றி என்ற எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு அரசியல் களத்தை பரபரப்பாக்கியிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக தேர்தலின் புனிதத்தன்மையை கெடுத்துப் பெற்ற பொய்யான வெற்றி என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். மகாராஷ்டிராவில் அப்பட்டமான தேர்தல் முறைகேடு அரங்கேறியிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றிப்பெற்றிருந்த வேளையில், சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி எதிர்பாராத வகையில் அமோக வெற்றியை தனதாக்கியது. இந்த வெற்றி குறித்து எதிர்க்கட்சிகள் பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தன. இப்போது மீண்டும்... மகாராஷ்டிரா தேர்தல் குறிவைக்கப்படுவதற்கு பின்னணியில் தேர்தல் ஆணைய நடவடிக்கை இருக்கிறது.
இந்திய தலைமை தேர்தல் ஆணைய பரிந்துரையின் பேரில் மத்திய அரசு, தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் விதி 93 (2) (a)வில் சில திருத்தங்களை செய்துள்ளது.
தேர்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும் என விதி இருந்தது. இப்போது திருத்தம் செய்யப்பட்ட பிறகு தேர்தல் தொடர்பாக இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களும் பொது ஆய்வுக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வேட்புமனுக்கள், தேர்தல் முடிவுகள், செலவு கணக்குகள் காகித ஆவணங்கள் பொது ஆய்வுக்கு கிடைக்கும். சிசிடிவி உள்ளிட்ட மின்னணு ஆவணங்கள் பொது ஆய்வுக்கு கிடைக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது மத்திய அரசு திருத்தம் செய்திருக்கும் விதியின்படி பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றம் டிசம்பர் 9 ஆம் தேதி முக்கிய உத்தரவை பிறப்பித்தது. அரியானா தேர்தல் வாக்குக்குசாவடியில் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆவணங்களை மனுதாரருக்கு வழங்க தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அடுத்து தேர்தல் ஆணையம் விதிகளில் திருத்தம் செய்திருப்பது எதிர்க்கட்சிகளிடம் இருந்து பெரும் தாக்குதலை எதிர்க்கொண்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் துணிச்சலான திருத்தம், தேர்தல் ஆணைய ஒருமைப்பாட்டை அழிப்பதற்கான மோடி அரசின் மற்றொரு திட்டமிட்ட சதித்தாக்குதல் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளாசியுள்ளார்.
தேர்தல் ஆணையம் மோடி அரசின் அழுத்தத்துக்கு மனமுவந்து பணிந்துவிட்டது, சுதந்திரமான – நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதன் மீது தொடுக்கப்பட்டுள்ள மக்களாட்சிக்கு விரோதமான தாக்குதலை பாஜக தொடுத்துள்ளது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது வாக்காளர்களின் தனியுரிமையை பாதுகாப்பதற்காக செய்யப்பட்டதற்கான திருத்தம் எனவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வேட்பாளர்கள் அனைத்து ஆவணங்களையும், பதிவுகள், காட்சிகளையும் அணுகலாம் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
சட்ட வல்லுநர்கள் ஒருசாரர் சிலர் விதிகள் திருத்தத்தை வரவேற்றாலும், மற்றொரு சாரர் பொதுவான ஆய்வை கட்டுப்படுத்து ஆபத்தான முன்னுதாரணமாக அமையும், தேர்தலில் வெளிப்படைத்தன்மைக்கு பெரும் பின்னடைவாக அமையும் எனவும் குற்றம் சாட்டுகிறார்கள்.