``இனி உலகம் முழுக்க திருப்பதி ஏழுமலையான் ராஜ்யம் தான்’’ - தேவஸ்தானம் எடுத்த முக்கிய முடிவு
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமாக சர்வதேச அளவில் கோயில்களை கட்ட தேவையான ஆலோசனைகளை வழங்க குழு அமைக்க அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
திருப்பதி மலையில் நடைபெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில், பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆலோசனைப்படி, நாட்டில் முக்கியமான இடங்கள், சர்வதேச அளவில் ஏழுமலையானுக்கு கோயில்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. சர்வதேச அளவில் சொத்துக்களை ஏற்படுத்தவும், இந்த பணிகளை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ் மருத்துவமனைக்கு, தேசிய அங்கீகாரம் பெற்று தர தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது. நடந்து வரும் பக்தர்களுக்காக கூடுதல் மருத்துவ வசதிகள், தேவஸ்தான சேவைகளின் பின்னூட்டம் அறிய, அரசுடன் சேர்ந்து ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டது. காஞ்சி காமகோடி பீடம் திருப்பதியில் நடத்திவரும் பாரம்பரிய பள்ளிக்கு 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, தேவஸ்தான சுகாதாரத் துறையில் உணவு பாதுகாப்பு அதிகாரி நியமனத்திற்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.