குழந்தையை கொன்று புதைத்து மீண்டும் தோண்டி பீஸ் பீஸாக வெட்டிய தாய் - ஒரு டப்பாவுக்குள் அடங்கிய உயிர்

x

கேரளாவில், தவறான உறவில் பிறந்த பச்சிளங் குழந்தையை கொன்று, கை, கால்களை வெட்டி வீசிய தாயின் கொடூர செயலை விளக்குகிறது இந்த தொகுப்பு...

இப்படியும் ஒரு தாயா? என நெஞ்சை பதற வைக்கிறது கேரள பெண்ணின் நடுங்க வைக்கும் செயல்...

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே அஞ்சுதெங்கு கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கடற்பகுதியில் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு, பிறந்த குழந்தையின் உடல் ஒன்று கை, கால்கள் உடைக்கப்பட்ட நிலையில் கரை ஒதுங்கியது.

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் வந்த போலீசார், அந்த பச்சிளங்குழந்தையின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையைக் கொன்று போட்டது யார்? எங்கிருந்து குழந்தையின் உடல் மிதந்து வந்தது? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

அதன்படி முதற்கட்டமாக, திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம் உட்பட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில், கடந்த ஒரு வாரத்திற்குள் குழந்தை பெற்றவர்களின் முகவரிகளை போலீசார் சேகரிக்க ஆரம்பித்தனர்.

அந்த பட்டியலில் உள்ள குழந்தைகளை பெற்றவர்களிடம் விசாரித்தபோது, அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த ஜூலி என்ற பெண்மணியை, காவல்நிலையம் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, போலீசாரின் கேள்விக்கு திக்குமுக்காடிய ஜூலி, தனக்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை எனக் கூறி நழுவியுள்ளார்.

ஜூலியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் அதிகரிக்கவே, அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மகப்பேறு மருத்துவரிடம் போலீசார் பரிசோதனை நடத்தினர். அதில் குழந்தை பெற்றது உண்மைதான் என தெரியவந்ததை அடுத்து, ஜூலியிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தினர்.

ஆனால், விசாரணைக்கு பயந்து ஜூலி அளித்த வாக்குமூலம் போலீசாரை அதிர வைத்தது.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, கணவனை இழந்த ஜூலி, சில வருடங்களுக்குப் பிறகு, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாற, இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

இதனிடையே, ஜூலி கர்ப்பம் தரிக்கவே, வெளியில் தெரிந்தால் அவதூறாக பேசுவார்கள் என எண்ணி, அதனை மறைத்து வந்துள்ளார்.

10 மாதங்களுக்குப் பிறகு குழந்தை பிறந்த நிலையில், குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அப்போது எங்கே அக்கம்பக்கத்தினருக்கு தெரிந்துவிடுமோ என பயந்த ஜூலி, குழந்தையின் வாய் மற்றும் மூக்கை கைகளால் அடைத்து மூச்சை அடக்கி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமல்லாமல், கொலையை மறைக்க, குழந்தையின் கை, கால்களை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு வீட்டின் உள்ளேயே குழிதோண்டி புதைத்தது தான் கொடூரம்...

பின்னர் 2 நாட்கள் கழித்து மீண்டும் குழந்தையின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து, பச்சிளங் குழந்தையின் உடல் பாகங்களை கடற்பகுதியில் வீசியதும் விசாரணையில் அம்பலமானது.

இதனையடுத்து போலீசார் ஜூலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவறான உறவால் பிறந்ததற்காக, ஏதும் அறியா பச்சிளங்குழந்தையை தாயே கொன்று உடல் பாகங்களை வெட்டி வீசியது நெஞ்சை உலுக்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்