"உச்சநீதிமன்ற தீர்ப்பை திரித்து ஈஷாவுக்கு எதிராக பொய் பிரசாரம்"
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் உச்சநீதிமன்ற தீர்ப்பை திரித்து ஈஷாவிற்கு எதிராக திட்டமிட்டு பொய் பரப்புரையை மேற்கொள்வதாக ஈஷா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஈஷாவுக்கு எதிரான ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஈஷா மீதான அவதூறு குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்து வழக்கை முடித்து வைத்ததை சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக காவல்துறை விரிவான விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்த பின்னரும், உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவான தீர்ப்பினை வழங்கியப் பிறகும் பொய்யான அவதூறு பரப்புரையை மேற்கொண்டு போராட்டங்கள் நடத்துவது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது என்றும் ஈஷா அறக்கட்டளை கூறியுள்ளது. மேலும் ஈஷாவுக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் உள்ளிட்ட அமைப்புகளுக்கு கண்டனங்களை தெரிவித்து கொள்வதாக ஈஷா தெரிவித்துள்ளது.