ஊழல் புகார்.. - பங்கு சந்தை செபி தலைவருக்கு பறந்த நோட்டீஸ்

x

ஊழல் புகார் தொடர்பாக பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரிய தலைவர் மாதபி புரி புச், திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட மூவரை வரும் 28ம் தேதி விசாரணைக்கு ஆஜராக லோக்பால் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செபி தலைவராக பதவியேற்கும் முன், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியில் மாதபி புரி புச் முக்கிய பதவிகளை வகித்தார். கடந்த 2017-ம் ஆண்டு செபியில் மாதபி புரி புச் சேர்ந்தது முதல், செபியிடம் இருந்து ஊதியம் பெறுவது மட்டுமின்றி, விதிமுறைகளை மீறி ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியிலும் பதவி வகித்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. அந்த வங்கியிடம் இருந்து ஊதியம் மற்றும் பிற பணப் பலன்கள் மூலம், அவர் 16 புள்ளி எட்டு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும் கூறியது. இதுதொடர்பாக லோக்பால் அமைப்பிடம், மாதபி புரி புச் மீது திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா உள்பட மூவர் புகார் அளித்தனர்.

புகார் தொடர்பாக 4 வாரங்களில் விளக்கமளிக்க மாதபி புச்சுக்கு கடந்த நவம்பரில் லோக்பால் உத்தரவிட்டது. இந்தப் புகார்களை கடந்த டிசம்பர் 19-ம் தேதி லோக்பால் அமைப்பு பரிசீலனை செய்தது. அப்போது தனது விளக்கம் அடங்கிய பிரமாண பத்திரத்தை மாதபி புரி புச் தாக்கல் செய்ததாக தெரிவித்தது. இந்நிலையில் மாதபி புரி புச், மஹுவா மொய்த்ரா உள்பட புகார் அளித்த மூவரும் ஜனவரி 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக லோக்பால் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்