25 இடங்களில் காயம்...நெரிக்கப்பட்ட கழுத்து...கொல்கத்தா டாக்டர் வழக்கு கிளைமாக்ஸில் திடீர் திருப்பம்
25 இடங்களில் காயம்...நெரிக்கப்பட்ட கழுத்து...கொல்கத்தா டாக்டர் வழக்கு கிளைமாக்ஸில் திடீர் அதிர்ச்சி திருப்பம் - நாடே அதிர்ந்த குற்றவாளியின் கடைசி வார்த்தை
நாடும் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கில் குற்றவாளிக்கு அதிரடியான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ள நிலையில், அதன் வீரியம் குறித்து விவரிக்கிறது
இந்த தொகுப்பு.
மாநிலத்தில் மிகப் பெரிய அரசு மருத்துவமனையில் இரவு பணியிலிருந்த பெண் பயிற்சி மருத்துவ மாணவி ஓய்வு அறையிலிருந்த போது பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் இரவு பணியிலிருந்த பயிற்சி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
மாணவி கிடந்த கோலத்தைப் பார்த்த மருத்துவர்களின் கண்கள் சிவக்க, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் இரண்டு மாதத்திற்கு மேலாக மருத்துவர்கள் நடத்திய போராட்டங்கள் ஆளும் மாநில அரசைக் கலக்கமடைய செய்தது.
மருத்துவர்களின் தீவிர போராட்டத்தை தொடர்ந்து, மருத்துவமனையில் தன்னார்வலராக இருந்து வந்த சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவத்தை செய்ததது ஒருவராக இருக்க முடியாது என்றும் நடந்தது கூட்டுப் பாலியல் வன்கொடுமை எனவும் மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. மருத்துவ கல்லூரியின் முதல்வர் சந்தீப் கோஷை அதிரடியாக விடுப்பில் செல்லுமாறு உத்தரவிட்டது. தொடர்ந்து வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. மேலும் விசாரணை நீதிமன்றம் தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்குமாறும் உத்தரவில் குறிப்பிடப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ நடத்திய விசாரணையில் மாணவிக்கு 25 இடங்களில் காயம் இருப்பதும், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இந்த சம்பவத்தில் ஆதாரங்களை அழித்தற்காக கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷையும், அவருக்கு உதவியதாக காவல்துறை அதிகாரி அபிஜித் மோண்டல் ஆகிய இருவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 90க்கும் மேற்பட்டோர்களிடம் விசாரணை நடத்திய சிபிஐ குற்றப்பத்திரிகையை சீல்டா மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இதில் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
வாதங்கள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில் இந்த வழக்கில் கைதான சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் தண்டனை விவரங்களை வரும் திங்கட்கிழமை அறிவிக்க இருப்பதாக நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.
இதனிடையே மாணவியை, தான் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யவில்லை என்றும், இந்த வழக்கில் தான் சிக்க வைக்கப்பட்டு இருப்பதாகவும் கைதான சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் இதில் சம்மந்தப்பட்டு இருப்பதாக சஞ்சய் ராய் தெரிவித்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..
நாட்டையே அதிர வைத்த பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் தான் குற்றவாளி என்பதை விசாரணை நீதிமன்றம் உறுதி செய்திருப்பது, நீதிக்காக போராடியவர்களை நிம்மதி அடைய செய்து இருக்கிறது.