தாக்கிய ராகுல்? வீல்சேரில் பாஜக MP - தள்ளிவிடப்பட்ட கார்கே?சீனுக்குள் வந்த மோடி-சீரியஸாகும் விவகாரம்
அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இரு கட்சி எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படும் சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
அம்பேத்கர் பெயரை பேஷனுக்காக பயன்படுத்திக் கொள்வதாக மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்த, நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்தது எதிர்க்கட்சியினரின் போராட்டம்.
இதன் எதிரொலியாக நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி. க்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது...
இதில் நாடாளுமன்ற பிரதான வாயிலில், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் எம்.பி.க்கள், பாஜக எம்பிக்களை தாக்கியதாக கூறப்படுகிறது...
இதில் பாஜக எம்.பி.க்களான பிரதாப் சிங் சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகிய இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், அது மட்டுமன்றி தெலுங்கு தேசம் எம்பி அப்பள நாயுடுவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், இது தொடர்பாக பேசியுள்ள நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரான கிரண் ரிஜிஜு, மற்ற எம்.பி.க்களுக்கு எதிராக தனது உடல் பலத்தை பயன்படுத்த ராகுல் காந்திக்கு யார் அங்கீகாரம் கொடுத்தது? என கேள்வி எழுப்பியதோடு,
எம்.பி.க்களுக்கு காயம் ஏற்படுத்தியதற்காக ராகுல் காந்தி, நாட்டு மக்களிடமும், காயம் ஏற்படுத்திய எம்பிகளிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மற்றொரு புறம், பாஜக எம்.பி.க்கள் மீது குற்றச்சாட்டை அடுக்குகின்றனர் காங்கிரஸ் எம்.பி.க்கள்.
நாடாளுமன்ற நுழைவு வாயில் முன்பு உள்ளே செல்ல முயன்ற தன்னை பாஜக எம்பிக்கள் தடுத்து நிறுத்தி, தள்ள முயன்றதாக ராகுல் காந்தி ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், தன்னை பாஜக எம்.பி.க்கள் பிடித்து தள்ளியதால் காயம் ஏற்பட்டதாக பரபரப்பு கிளப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.
இது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு மல்லிகார்ஜுன கார்கே எழுதிய கடிதத்தில்,
காலை நாடாளுமன்ற நுழைவு வாயில் முன்பு இந்தியா கூட்டணி எம்பி குழு உடன் தான் வந்தபோது பாஜக எம்பிக்கள் தன்னை பிடித்து தள்ளியதாகவும், ஏற்கனவே முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள தமக்கு இந்த நிகழ்வினால் மேலும் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக மக்களவை சபாநாயகர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இது மட்டுமன்றி காங்கிரஸ் எம்.பி.க்கள் தரப்பில் சபாநாயகரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற நுழைவு வாயிலில் யாரும் வழிமறிக்கக்கூடாது என நான்கு நாட்களுக்கு முன்பு மக்களவை சபாநாயகர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்களை பாஜக எம்பிக்கள் வழிமறித்து தடுத்தது அவை தலைவரின் அறிவுறுத்தலை மீறிய செயல் என மக்களவை சபாநாயகரிடம் காங்கிரஸ் எம்பிக்கள் புகார் அளித்துள்ளனர்.
இதற்கிடையில் காயமடைந்த எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்த சூழலில், இவ்விவகாரத்தால் பரபரக்கிறது நாடாளுமன்றம்..