"எல்லாம் வெறும் டிரைலர் தான்... காத்திருக்கும் மெயின் பிக்சர்.." - `க்' வைத்த PM மோடி
கடந்த 10 ஆண்டுகளில் செய்தவை எல்லாம் வெறும் டிரைலர் தான்... இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இன்னும் நிறைய செய்ய வேண்டி உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்...
ரிசர்வ் வங்கியின் 90வது ஆண்டு விழாவிற்காக மும்பையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 2018ல் 11.25 சதவீதமாக இருந்த வங்கிகளின் வாரா கடன்களின் எண்ணிக்கை 2023 செப்டம்பர் மாத நிலவரப்படி 3 சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர்,
இந்தியாவின் யுபிஐ தொழில் நுட்பம் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட தளமாக மாறி வருகிறது என பெருமிதம் தெரிவித்தார்... கடந்த பத்து ஆண்டுகளில் செய்தவை எல்லாம் வெறும் டிரைலர் தான் என தெரிவித்த பிரதமர் இந்தியாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல இன்னும் ஏராளமானவை செய்ய வேண்டி இருப்பதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் நிதி தற்சார்பை எட்ட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். கொரோனா போன்ற உலகளாவிய இடர்பாடுகள் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மிகப்பெரும் பொருளாதாரம் கொண்ட நாடுகள் இன்னும் மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியப் பொருளாதாரம் சாதனைகளை முறியடித்து இருப்பதாகப் பிரதமர் மோடி பூரித்தார்...