``இந்த கொடூர மிருகத்துக்கு இப்படியொரு சாதா தீர்ப்பா?’’ - இந்தியா முழுக்க வெடித்த பிரளயம்
நாட்டையே உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து பலரும் தெரிவித்த கருத்துக்கள் பேசு பொருளான நிலையில் அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு....
நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கொல்கத்தாவில் கடந்த ஆண்டு நடந்த சம்பவம் ஒட்டு மொத்த இந்தியாவையும் கொதித்தெழச் செய்தது.
மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையில் இரவு பணியிலிருந்த பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்க மாநிலமே ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் கொல்கத்தா காவல்துறையில் தன்னார்வலராக வேலை பார்த்து வந்த சஞ்ய் ராய் என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து வழக்கானது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. மருத்துவர்கள் தொடங்கி சுமார் 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரணை நடத்திய சியால்தா மாவட்ட நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த நிலையில் சஞ்சய் ராய்க்கான தண்டனை விவரங்களை நீதிபதி அனிர்பான் தாஸ் அறிவித்தார். அதன்படி சாகும் வரை சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு உடனடியாக மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிருப்தி அளிப்பதாக தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தங்களிடம் இருந்திருந்தால் நிச்சயமாக குற்றவாளிக்கு மரண தண்டனை கிடைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஏராளமான மருத்துவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்தும் குற்றவாளிக்கு மரண தண்டனையை உறுதி செய்யக் கோரியும் “அபயா மஞ்ச்“என்ற பெயரில் பேரணி நடத்தி நீதிமன்ற வளாகத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து வழக்கறிஞர் ரஹ்மான் என்பவர், இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கு இல்லை என்பதால் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்காமல் சாகும் வரை ஆயுள் தண்டனையை நீதிபதி வழங்கி இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
நாட்டை உலுக்கிய வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு பலராலும் விமர்சிக்கப்பட்டது பரபரப்பான பேசு பொருளாக இருந்து வருகிறது.