#JUSTIN | சொல்லி அடித்த ராகுல்... மீண்டும் No.12 துக்ளக் லேனில்..
ராகுல் காந்திக்கு அவரது அரசு பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ராகுல் காந்தி ஒட்டுமொத்த இந்தியாவும் எனது வீடு தான் என பதில் அளித்துள்ளார்
துக்ளக் லேன் இல்லம் ராகுல் காந்திக்கு திரும்ப கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்
மோடி குறித்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை தொடர்ந்து வயநாடு தொகுதி எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எம்.பி. பதவி பறிபோன சில தினங்களிலேயே ராகுல் காந்தி டெல்லி துக்ளக்லேன் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்தார். அவர் டெல்லி ஜன்பத் சாலையில் உள்ள தனது தாயார் சோனியா காந்தி இல்லத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி கிடைத்துள்ளது. 2 ஆண்டு ஜெயில் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்ததை அடுத்து அவரது எம்.பி. பதவிக்கான தகுதி நீக்கம் ரத்து செய்யப்பட்டது.
எம்.பி. பதவி கிடைத்துள்ளதால் ராகுல் காந்தி அரசு பங்களாவில் மீண்டும் குடியேறலாம். அவர் காலி செய்த பிறகு அந்த வீடு யாருக்கும் ஒதுக்கப்படவில்லை.
அரசு பங்களாவில் மீண்டும் வசிக்க வேண்டுமானால் பாராளுமன்ற வீட்டு வசதி குழுவிடம் ராகுல் காந்தி மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின் ராகுல் காந்திக்கு வீடு மீண்டும் ஒதுக்கப்படும். இதுதான் விதிமுறையாகும்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை வீட்டு வசதி குழுவிடம் அரசு பங்களா பிரச்சினையை எழுப்பினார். ஆனல் விதியின் கீழ் ராகுல் காந்தி மட்டுமே அதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ராகுல் காந்தி பாராளுமன்ற வீட்டு வசதி குழுவிடம் அரசு பங்களாவுக்காக விண்ணப்பிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு மீண்டும் துக்ளக் லேன் இல்லம் ஒதுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது