இந்திய ரயில்வேயின் மெகா பிளான் - பல கோடி இந்தியர்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்த அறிவிப்பு
நாடு முழுவதும் அதிகரிக்கும் ரயில் விபத்துகளை தவிர்க்க கவாச் கருவியை அமையப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
அன்றாடம் செய்திகளில் ரயில் விபத்துகள் குறித்த செய்தி இடம்பெறுவது வழக்கமாகி விட்ட சூழலில், அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..
அதில் முக்கியத்துவம் வாய்ந்தது கவாச் கருவி. ரயில்வே வடிவமைப்பு ஆராய்ச்சி அமைப்பான, ஆர்.டி.எஸ்.ஓ. உருவாக்கிய இந்த கவாச் கருவி, சிக்னல் கோளாறு மற்றும் அதி வேகத்தில் செல்வதை தவிர்க்க லோகோ பைலட்டுக்கு உதவுவது மட்டுமல்லாமல், மூடு பனி போன்ற மோசமான வானிலையின் போது ரயிலை இயக்கவும் உதவியாக உள்ளது.
இப்படி ரயிலில் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட கவாச் இயந்திரம், இரண்டு ரயில்கள் நேரெதிர் திசையில் வந்தால், 380 மீட்டருக்கு முன்பாகவே தானாக செயல்பட்டு இரண்டு எஞ்சின்களையும் நிறுத்தி விடும் வல்லமை பெற்றது.
விபத்தில்லா ரயில் பயணத்தை உறுதிப்படுத்த, ரயில்களில் கவாச் கட்டமைப்பை வலுப்படுத்த பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ரயில்வே நிர்வாகம்.
தென் மத்திய ரயில்வேயில் 1,465 ரூட் கிலோமீட்டர் தொலைவுக்கும் , 144 என்ஜின்களிலும் கவாச் பொருத்தப்பட்டுள்ளது.
இதே போல டெல்லி-மும்பை மற்றும் டெல்லி-ஹவுரா பாதைகளில் சுமார் 3,000 கிலோமீட்டர் அதிக அடர்த்தியான பாதைகளில் கவாச் அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் டெல்லி - சென்னை, மும்பை - சென்னை பிரிவுகளில் சுமார் 3 ஆயிரத்து 300 ரூட் கிலோமீட்டர் தொலைவிலும், முக்கிய தானியங்கி பிரிவுகளில் சுமார் 5,000 ரூட் கிலோமீட்டர் தொலைவிலும் கவாச் திட்டத்திற்கான ஏலம் கோரப்பட்டு வருகிறது.
அத்துடன் 10,000 என்ஜின்களில் கவாச் பொருத்துவதற்கான ஒப்புதல் ரயில்வே நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்காலத் திட்டமாக அனைத்து என்ஜின்களிலும் அடுத்த 4 ஆண்டுகளில் கவாச் பொருத்துதல் , RFID மூலம் குறைந்த தொகுதி பிரிவு கவாச் பாதுகாப்பு , ரயில் நிலையம் மற்றும் பணிமனைகளில் கவாச் அமைப்பை உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
எனவே வரும் காலங்களில் இயற்கை பேரிடர்கள், சிக்னல் கோளாறுகள், போன்ற காரணத்தினால் ஏற்படும் ரயில் விபத்துகள் கவாச் அமைப்பு மூலம் தவிர்க்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.