"யோசித்து பேசவும்" - வங்கதேசத்திற்கு வார்னிங் கொடுத்த இந்தியா
ஹசீனா அரசாங்கம் கவிழ்ந்ததை தொடர்ந்து இந்தியா - வங்கதேசம் இடையிலான உறவு மோசமாக செல்கிறது. இந்த சூழலில் வங்கதேச இடைக்கால அரசை நடத்தும் முகமது யூனுசின் உதவியாளரான மபூஸ் ஆலம், ஆத்திரமூட்டும் வகையில் இந்தியாவை துண்டாடுவோம் என்ற கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அசாம், திரிபுரா, மேற்கு வங்கம் என இந்திய பகுதிகள் உள்ளடங்கிய வகையில் மேப்பையும் பதிவிட்டு இருந்தார். 1971 ஆம் ஆண்டு இந்தியா வங்கதேசத்திற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த டிசம்பர் 16 ஆம் தேதியில் அவர் வெளியிட்ட கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இவ்விவகாரம் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், வங்கதேசத்திடம் வலுவான எதிர்ப்பை பதிவு செய்துவிட்டோம், இப்போது பதிவு நீக்கப்பட்டுள்ளது என்றார். வங்கதேசத்தோடு நட்புறவையே விரும்புவதாக தெரிவித்த அவர், கருத்துக்களை யோசித்து தெரிவிக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள நினைவூட்டுவதாக எச்சரித்தார்.