சரியும் இந்துக்கள் எண்ணிக்கை; எகிறிய இஸ்லாமியர் எண்ணிக்கை..? என்ன சொல்கிறது அரசு டேட்டா..?
இந்து - இஸ்லாமிய மக்கள் தொகை விவகாரத்தில் காங்கிரசை பாஜக டார்க்கெட் செய்திருக்கும் வேளையில், இதன் பின்னணி என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு....
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்துவிட்டால், நாட்டு மக்களின் சொத்துக்களை பறித்து ஊருவல்காரர்கள், அதிக பிள்ளை பெற்றவர்களிடம் கொடுத்துவிடும் என அண்மையில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியது அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக பிரசாரத்தில் மதம் சார்ந்த பேச்சுக்கள் அதிகமாகின.
காங்கிரஸ் கட்சி, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை இஸ்லாமியர்களுக்கு கொடுத்துவிடும், கிரிக்கெட்டில் கூட சிறுபான்மையினருக்கே வாய்ப்பளிக்கும் என பிரதமர் மோடி பேசி வருகிறார். இந்த சூழலில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மக்கள் தொகை விகிதம் குறித்த பேச்சு எழுந்துள்ளது.
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. அதில் 1950 தொடங்கி 2015 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் இந்துக்கள் எண்ணிக்கை 7.8 சதவீதம் சரிந்துவிட்டது, அதுவே இஸ்லாமியர்கள் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்துவிட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது. 1950 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 84.68 சதவீதம் இந்துக்கள், 2015 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 78.06 சதவீதமாக சரிந்துவிட்டது எனவும், இதுவே 1950 ஆம் ஆண்டு 9.84 சதவீதமாக இருந்த இஸ்லாமியர்கள் மக்கள் தொகை, 14.09 சதவீதமாக உயர்ந்துவிட்டது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை தொடர்பான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள பாஜக ஐ.டி. விங் தலைவர் அமித் மாளவியா, காங்கிரசை விமர்சனம் செய்துள்ளார். இந்துக்கள் எண்ணிக்கை குறைய காங்கிரசே காரணம் என குற்றம் சாட்டியிருக்கும் மாளவியா, காங்கிரசை ஆட்சி செய்யவிட்டால் இந்துக்களுக்கான நாடே இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.
உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியாவோ... இஸ்லாமியர் எண்ணிக்கை அதிகரிப்பது கவலைக்குரியது, காங்கிரஸ், முஸ்லீம் லீக் போல் செயல்பட்டதே இதற்கு காரணம் என குற்றம் சாட்டினார். இதனால் தான், பொது சிவில் சட்டத்தை கேட்பதாக கூறும் மவுரியா, அப்படியில்லை எனில் இன்னொரு பாகிஸ்தான் கோரிக்கை எழும் எனவும் பேசியிருக்கிறார்.
இப்படி இஸ்லாமியர் மக்கள் தொகை அதிகரிக்கும் வேளையில்தான், மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டை வழங்க காங்கிரஸ் முயற்சிக்கிறது எனவும் பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
இதற்கிடையே தேர்தல் நடக்கும் வேளையில் இந்த அறிக்கை வெளியானது உள்நோக்கம் கொண்டது என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகள் மத்தியில் நிலவுகிறது.
இதற்கிடையே அறிக்கை குறித்து பதில் அளித்திருக்கும் ஐதராபாத் எம்.பி. ஒவைசி... இந்த அறிக்கையை சமர்பித்தது யார்? இந்த அறிக்கை யாருடையது என்ற கேள்விகளை எழுப்பியதோடு, இது வாட்ஸ் அப் பல்கலைக்கழக அறிக்கை என விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தலுக்கு மத்தியில் இந்த அறிக்கையை வெளியிட எப்படி முடிவு செய்யப்பட்டது? என கேள்வி எழுப்பியிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி. ராஜா, மக்களை மத அடிப்படையில் பிளவுப்படுத்தும் முயற்சி நடக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறார்.
ஏற்கனவே இஸ்லாமியர்களை தாஜா செய்யும் அரசியலை காங்கிரஸ் செய்வதாக குற்றம் சாட்டிவரும் பாஜக... பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கையை வைத்தும் காங்கிரசை டார்கெட் செய்து வருகிறது...