3 நாளில் தலையே சொட்டையாகும்தொட்டாலே கொத்து கொத்தாக கொட்டும் முடி"இது வழுக்கை வைரஸ்" -பீதியில் மக்கள்
மகாராஷ்டிரா கிராமங்களில் திடீரென தலையை தொட்டாலே முடி கொட்டுவதால், வழுக்கை வைரஸ் பரவுவதாக மக்கள் அச்சம் அடைந்திருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு
லேசாக இழுத்ததும் சிறுவன் தலையில் இருந்து கொத்தாக முடி வரும் காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் கொத்துக் கொத்தாக முடி உதிரும் காட்சிகள் மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்ட கிராமங்களில் இருந்து வெளியாகி வருகிறது.
போர்காவ், கல்வாட், ஹிங்னா கிராமங்களில் மொத்தமாக முடி கொட்டுவதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் வழுக்கை ஆகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழுக்கை வைரஸ் பரவுகிறது - கிராம மக்கள் அச்சம்
பள்ளி செல்லும் குழந்தைகள் தலை வழுக்கையானதால் முக்காடு போட்டுச் செல்லும் காட்சிகள் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. கிராமங்களில் தலையை 3 நாட்களில் வழுக்கையாக்கும் புதிய மர்ம நோய் பரவி வருவதாகவும், அது வழுக்கை வைரஸ் பாதிப்பு எனவும் மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
அப்படியொரு வைரஸ் இல்லை என்றாலும், கிராமங்களில் மக்கள் தொடர்ந்து வழுக்கையாவதால் மக்கள் அச்சத்தில் அப்படியே அழைக்கிறார்கள்.
தண்ணீர் மாசு காரணமாக முடி கொட்டலாம் - அதிகாரிகள் தகவல்
சம்பவம் வெளியே தெரியவந்ததும் உள்ளூர் மாவட்ட நிர்வாகம் மருத்துவ குழுவை அனுப்பி ஆய்வுவை மேற்கொண்டுள்ளது. மருத்துவ குழு கிராம மக்களின் தோல், முடி மற்றும் தண்ணீர் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றுள்ளது.
தண்ணீர் மாசு காரணமாக முடி உதிரும் பிரச்னை வந்திருக்கலாம் என கூறியிருக்கும் சுகாதாரத்துறை அதிகாரிகள், பரிசோதனை முடிவிலேயே உறுதியான காரணம் தெரியவரும் என கூறியுள்ளனர்.
இப்படி மொத்தமாக முடி கொட்டுவதை அலோபீசியா என குறிப்பிடப்படும் மருத்துவ வல்லுநர்கள், அசுத்தமான நீர், தலையில் பூஞ்சை தொற்று, வைட்டமின் குறைபாடு மற்றும் சில ரசாயனங்களால் ஏற்பட்டு இருக்கலாம் என கூறுகிறார்கள்.
யாருக்கு எப்போது வழுக்கை ஏற்படுமோ? - மக்கள் அச்சம்
பாதிக்கப்பட்ட கிராமங்கள் வழியாக பாயும் புர்ணா நதியில் நீர் தரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நதியில் குளிப்பதை தவிர்க்கும் கிராம மக்கள், யாருக்கு எப்போது முடி உதிருமோ என்ற அச்சத்தோடு, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.