கூகுள் பே-ல் இனி இலவசம் கிடையாது - பணம் அனுப்புனா GST உடன் காசு பிடிப்பாங்க

x

இந்தியாவில் கூகுள் பே 'பில்' கட்டணங்களுக்கு கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்க தொடங்கி இருப்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு

இன்றைய டெக் உலகில் பண பரிவர்த்தனை அரிதாகி, எல்லாம் ஆன்லைன் பரிவர்த்தனையாகி வருகிறது. பொருளை வாங்கினோமா... போனை எடுத்தோமா... பைசாவ போட்டோமா... போனோமா என்ற சூழலையே பார்க்கிறோம். தள்ளுவண்டிக் கடை முதல் பெரிய வணிக நிறுவனங்கள் வரையில் அனைத்து இடங்களையும் அலங்கரிக்கிறது யு.பி.ஐ. கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, BHIM என கூகுள் ப்ளே ஸ்டோரில் யு.பி.ஐ. செயலிகள் படையெடுப்பும் அதிகரிக்கிறது.

மக்களால் எளிதில் பயன்படுத்தக்கூடிய பரிவர்த்தனையாக யு.பி.ஐ. இருக்க, OTT சந்தாக்கள், காப்பீட்டு பிரீமியங்கள், கடன் திருப்பி செலுத்துதல், மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம், மொபைல் போன் ரீசார்ஜ் என எல்லாவற்றையும் ஒரு செயலில் கட்ட சகல வசதியையும் கொண்டிருக்கிறது யு.பி.ஐ. இந்தியாவில் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் மாதத்திற்கு மாதம் அதிகரிக்கிறது.

கடந்த ஜனவரியில் 16.99 பில்லியன் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. 23 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. 2024 ஜனவரியோடு ஒப்பீடும் போது 39 % அதிகரித்துள்ளது. 2024 ஜனவரியில் 18 லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை ஆகியிருந்தது.

இதற்கிடையே இலவசமாக வழங்கப்பட்ட பில் கட்டணங்களுக்கு கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்க தொடங்கிவிட்டன யு.பி.ஐ. நிறுவனங்கள்.

அந்த வகையில் கூகுள் பே, மின்சாரம், எரிவாயு போன்ற பில் கட்டணங்களுக்கு கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்க தொடங்கிவிட்டது. பரிவர்த்தனை தொகை மதிப்பில் 0.5% முதல் 1% வரையில் கட்டணம், ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கிறது. டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் பயனர்களுக்கு மட்டும் இப்போதைக்கு இந்த கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கூகுள் பே கடந்த ஆண்டே மொபைல் போன் ரீசார்ஜ் கட்டணத்திற்கு 3 ரூபாய் கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்க தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

போன் பே, பேடிஎம் போன்ற நிறுவனங்களும் குடிநீர், மின் கட்டணங்களை டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் போது பயனாளர்களிடம் கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்கிறது. அந்த வகையில் கூகுள் பேவும் கட்டணத்தை தொடங்கிவிட்டது.

இந்தியாவில் போன் பேவுக்கு அடுத்தப்படியாக 37 சதவீதம் யுபிஐ பரிவர்த்தனை நடக்கும் செயலியாக கூகுள் பே உள்ளது. யு.பி.ஐ. செயலிகளில் லட்சம் கோடிகள் பரிவர்த்தனைகள் ஆனாலும், செயலிகளை செயல்படுத்தும் பின்டெக் நிறுவனங்கள் கணிசமான வருவாயை பெற போராடுவதாகவும், அதனால் கட்டணங்களுக்கு கன்வீனியன்ஸ் கட்டணம் வசூலிக்க தொடங்கிவிட்டதாகவும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்