“கெஜ்ரிவால் வீடு அருகே முக்கிய குற்றவாளி ரூ.100 கோடி கேட்டு கைமாறிய ரூ.45 கோடி?“ - தலையில் கை..தலைநகரை ஆடா வைத்த ED

x

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக, அமலாக்கத்துறை காரசாரமான விவாதங்களை முன்வைத்துள்ளது... அது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்

ஊழலை துடைப்பத்தால், தூய்மை செய்கிறேன் எனக்கூறி ஆட்சியை பிடித்த அரவிந்த் கெஜ்ரிவால், அதே ஊழல் புகாரில் சிக்கியது காலத்தின் கொடுமை என்றுதான் சொல்ல வேண்டும்... ஆம் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதால் தலைநகரமே ஆட்டம் கண்டுள்ளது.

யூனியன் பிரதேசமான டெல்லியில், மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் 2800 கோடி பணம் புழங்கியதாக, புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அமலாக்கத்துறை அந்த வழக்கை கையில் எடுத்தது...

ஹேமந்த் சோரன் கைது, 9 முறை அனுப்பப்பட்ட சம்மன், எல்லா வற்றையும் சேர்த்து, அடுத்த கைது அரவிந்த் கெஜ்ரிவால்தான் என ஆருடம் கூறியது அரசியல் வட்டாரங்கள்.

அதே நேரத்தில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் தன் மீதான கைது நடவடிக்கைக்கு தடை விதிக்க கோரினார் அரவிந்த் கெஜ்ரிவால். ஆனால் நீதிமன்றம் கைதுக்கு எந்த தடையும் இல்லை என பச்சை கொடி காட்டியது...

தடாலடியாக களமிறங்கிய அமலாகத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. இந்த நிலையில்தான், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவேரி பவேஜா முன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர்படுத்தப்பட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால்தான், மதுபான கொள்கை ஊழல் வழக்கின் முக்கிய நபர் என காரசாரமான வாதங்கள் முன்வைத்தது அமலாக்கத்துறை. வழக்கின் முக்கிய குற்றவாளியான விஜய்நாயர் கெஜ்ரிவாலின் வீட்டுக்கு அருகே தங்கி, அவருக்கு நெருக்கமாக செயல்பட்டதாகவும், அமலாக்கத்துறை அங்கலாய்ப்புடன் தெரிவித்துள்ளது.

மதுபான கொள்கை மூலம் பலனடையும் மதுபான வியாபாரிகளிடம் இருந்து 100 கோடி பெற்றுத் தருமாரு, அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்திதாகவும், அதில் பெறப்படட பணம், பஞ்சாப் கோவா தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாக கோவாவில் 45 கோடி கைமாறியது எனவும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.

மதுபான கொள்கை விஷயத்தில் தம்முடன் இணைந்து செயல்பட தெலங்கானா எம்எல்சி கவிதாவுக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்ததாகவும், நீதிமன்றத்தில் கூறியுள்ளது அமலாக்கத்துறை தரப்பு. காரணம் மேல் காரணங்களை அடுக்கிய அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியது.

அமலாக்கத்துறையிடம் வாக்குமூலத்தை தவிர எவ்வித ஆதாரமும் இல்லை. ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருப்பது மக்களவைத் தேர்தலில் சம வாய்ப்பை பறிப்பதாக உள்ளது. எனவே, அவரை அமலாக்கத்துறை காவலுக்கு அனுப்பி வைக்க கூடாது என வாதிட்டது அரவிந்த் கெஜ்ரிவால்தரப்பு. ஆம் ஆத்மி தரப்பு, பாயிண்டுகளை அடுக்கினாலும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்கியுள்ளது நீதிமன்றம்.

பரபரப்புக்கு மத்தியில்,இந்தியா கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணையத்தை நேரில் சந்தித்து, மத்திய விசாரணை அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

ஆளும் மத்திய தரப்புக்கு, அமலாக்கத்துறை சாமரம் வீசி வருவதாக இண்டியா கூட்டணி மேடைக்கு மேடை முழங்கி வரும் நிலையில், தேர்தல் பங்கு பத்திர விவகாரத்தை மறைக்கவே இந்த கைது என்ற செய்தியும் உலவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்