துபாயிலிருந்து கண்ணீர் விட்டு கதறும் தமிழக இஸ்லாமிய பெண்.. தீயாய் பரவும் வீடியோ
வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற இஸ்லாமிய பெண்ணை அடைத்து வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு அழைத்து வரவும் அவரது தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் எள்ளேரியை சேர்ந்த ஜானுபா பானு என்பவர், கணவரை இழந்த நிலையில் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த முகமது அலி என்ற நபர் மூலம், ஜானுபா பானு துபாய்க்கு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது. குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு துபாய்க்கு சென்ற அவர், தற்போது கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த சில தினங்களாக இருள் சூழ்ந்த தனி அறையில் பூட்டி வைத்து சிலர் தாக்குவதாகவும், 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் விட்டுவிடுவோம் என மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். அடிக்கடி பல்வேறு இடங்களில் தன்னை மாற்றி வைப்பதாகவும், உயிரோடு மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள ஜானுபா பானுவின் தாயார் நாச்சியா, முதலமைச்சர் ஸ்டாலின் தனது மகளை மீட்டுத் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.