அவரை ஏலம் எடுக்காம விடவே கூடாது.. மிக்சர் சாப்பிட்ட CSK-வின் திடீர் விஸ்வரூபம்
அவரை ஏலம் எடுக்காம விடவே கூடாது.. மிக்சர் சாப்பிட்ட CSK-வின் திடீர் விஸ்வரூபம் - RCB, RR, லக்னோவுடன் யுத்தம் செய்து தட்டித் தூக்கிய தோனி
சென்னை மண்ணின் மைந்தனான ரவிச்சந்திரன் அஷ்வின், 10 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்குகிறார்... அதைப்பற்றி பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்....
இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர்... நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர், உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பிடித்த தமிழர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்.. ஆனால் இந்த பயணம் தொடங்கியது எல்லாம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில்தான்...
ஆம்... 2009-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்ட அஷ்வின், 2010-ஆம் ஆண்டு சீசனில் தனது கேரம் சுழற்பந்து வீச்சால் அனைவரையும் புருவம் உயர வைத்தார்.
அடுத்தடுத்த சீசன்களிலும் கலக்கிய அவருக்கு, தேசிய அணியிலும் இடம் கிடைத்தது. இந்திய அணி கேப்டனாக இருந்த தோனியே, சென்னை அணிக்கும் கேப்டனாக இருந்ததால், அவரால் நன்கு பட்டை தீட்டப்பட்டு உலகின் மிகச்சிறந்த பவுலராக மாறினார் அஸ்வின்.....
2009 முதல் 2015-ஆம் ஆண்டு வரை சி.எஸ்.கே. அணிக்காக விளையாடிய அஷ்வின், 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் புனே அணிக்காக விளையாடினார்.
2018 முதல் 2024-ஆம் ஆண்டு வரை பஞ்சாப், டெல்லி, ராஜஸ்தான் என பல அணிகளுக்காக விளையாடிவிட்டார் அஷ்வின்...
இந்த நிலையில்தான் 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. சென்னை அணியில் இந்த முறையாவது அஷ்வின் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குரல் எழுப்பி வந்தனர்.
கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அஷ்வினின் பெயர் ஏலத்தில் வந்தபோது, அவரை வாங்கியே தீர வேண்டும் என கடுமையாக போராடியது சி.எஸ்.கே. நிர்வாகம்..
பெங்களூரு, லக்னோ, ராஜஸ்தான் என 3 அணிகளுடன் மல்லுக்கட்டி, இறுதியாக 9 கோடியே 75 லட்சத்திற்கு அஷ்வினை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.
10 ஆண்டுகளுக்கு பின் மஞ்சள் ஜெர்ஸி அணியவுள்ளது உணர்வுப்பூர்வமாக இருப்பதாகவும், ருத்துராஜ் தலைமையில் தோனியுடன் இணைந்து விளையாட ஆர்வமாக இருப்பதாகவும் நெகிழ்ந்துள்ளார் அஸ்வின்...
ரசிகர்களால் செல்லமாக ஆஷ் அண்ணா என்று அழைக்கப்படும் அஷ்வின், தனது கேரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதாக கருதப்படும் நிலையில், மீண்டும் தனது சொந்த அணியுடன் இணைந்தது ரசிகர்களுக்கும் நெகிழ்ச்சியான தருணமாகவே அமைந்துள்ளது.
அண்ணன் வர்றார் வழிவிடு என சமூக வலைதளங்களில் கொண்டாடி வரும் ரசிகர்கள், மார்ச் மாதத்தில் ஆஷ் அண்ணாவை மஞ்சள் துணியில் பார்க்க பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.