வீடு புகுந்து மரம் அறுக்கும் மெஷினால் கண்டம் துண்டமாக வெட்டிய கொடூரன் - நடுங்கவிடும் வீடியோ
பழி, பகை, கோபம் ஏதும் இல்லை ஆனால் வீடு புகுந்து மரம் அறுக்கும் மெஷினால் கண்டம் துண்டமாக வெட்டிய கொடூரன்
மரம் அறுக்கும் இயந்திரத்தால், கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தவரை கண்டம் துண்டமாக அறுத்துப்போட்ட கதிகலங்க வைக்கும் காட்சிகள் தான் இது...
கொரியர் பாய் போல சாதாரணமாக வீட்டிற்குள் நுழைந்த வாலிபர், மனைவியை கன்னத்தை வெட்டி, கணவனை கழுத்தறுத்து கூறுபோட்டிருக்கிறார்.
சம்பவம் நடந்த இடம் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கியாத்தனஹள்ளி பகுதி. இங்கு வசித்து வந்தவர் தான் கொல்லப்பட்ட ரமேஷ். 60 வயதான இவரது மனைவி யசோதம்மா. இந்த தம்பதிக்கு பிள்ளைகள் உள்ளனர்.
விவசாயியான ரமேஷ், கடந்த சில ஆண்டுகளாக பக்கவாதத்தால் படுத்த படுக்கையாகி இருக்கிறார். இந்த நிலையில் தான் சம்பவத்தன்று ரமேஷின் மகன் கடைக்கு சென்ற நேரத்தில், கொரியர் வந்திருப்பதாக வாலிபர் ஒருவர் வீட்டின் கதவை தட்டி இருக்கிறார்.
கதவை திறந்து வந்து பார்த்த போது, “மரம் அறுக்கும் இயந்திரம் ஆர்டர் செய்துள்ளீர்கள், வாங்கிக்கொள்ளுங்கள்“ என யசோதம்மாவிடம் கொடுத்திருக்கிறார் அந்த வாலிபர். ஆனால் யசோதம்மாவோ “எங்கள் வீட்டில் அப்படி எதுவும் ஆர்டர் செய்யவில்லை, நீங்கள் போகலாம்“ என அந்த வாலிபரிடம் கூறி வெளியே அனுப்ப முயற்சித்துள்ளார்.
திடீரென அந்த வாலிபர், மரம் அறுக்கும் இயந்திரத்தை ஆன் செய்து யசோதம்மாவின் கழுத்தை ஒரு கையால் பிடித்து கொண்டு மறு கையால் கன்னத்தில் வெட்டி இருக்கிறார். இதில் ரத்தம் சிதறி கன்னத்தில் காயம் ஏற்பட்டு, யசோதம்மா சுருண்டு விழுந்திருக்கிறார்.
ரத்தம் பார்த்த அந்த இயந்திரத்தோடு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த ரமேஷின் கழுத்தை கரகரவென அறுத்திருக்கிறார்.
கணவனை கொலை செய்வதை கண்டு அலறிய யசோதம்மா, அந்த வாலிபரை தடுத்திருக்கிறார். ஆனால் அவரோ விடுவதாயில்லை. இயந்திரத்தை ரமேஷின் உடலில் ஓட விட்டிருக்கிறார். அவ்வளவு தான் ரத்தமும் சதையுமாக வீடும் முழுவதும் சிதறி இருக்கிறது. ரமேஷும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போயிருக்கிறார்.
உடனே சுதாரித்துக்கொண்ட யசோதம்மா, குற்றவாளியை தப்பிக்க விடாமல் இருக்க வீட்டின் கதவை முன்பக்கமாக பூட்டிவிட்டு, அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்திருக்கிறார். அடுத்த கணமே அனைவரும் ஓடி வந்து யசோதம்மாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, ஸ்ரீரங்கபட்டணா ரூரல் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
வெளியே கதவு பூட்டப்பட்டதால் அந்த வாலிபர் தப்பிக்க வழி இல்லாமல் உள்ளேயே இருந்துள்ளார்.அதற்குள் கடைக்கு சென்ற யசோதம்மாவின் மகனும் வந்திருக்கிறார். அனைவரும் கதவை திறந்து அந்த மர்ம நபரை பிடித்து சரமாரியாக அடித்து துவைத்திருக்கிறார்கள்.
வாலிபரிடம் “எதற்காக கொலை செய்தாய்?“ என்று கேட்டபோது, “நான் கொலை செய்ய வரவில்லை, மைசூரில் மரம் அறுக்கும் இயந்திரம் விற்பனை செய்யும் கடையில் பணிபுரிகிறேன், இயந்திரத்தை விற்கவே வந்தேன்“ என்று கூறி மழுப்பி இருக்கிறார்.
மீண்டும் கேட்டபோது “என்னையும் கொன்று விடுங்கள்“ என மாறி மாறி பேசி அனைவரையும் குழப்பி உள்ளார்.
பிறகு போலீசாரிடம் அந்த நபரை ஒப்படைத்தனர். ரமேஷின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அந்த மர்ம நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்திருக்கிறார்கள்.
அப்போது தான் நடந்த கொலைக்கான காரணம் தெரியவந்திருக்கிறது. அந்த மர்ம நபரின் பெயர் முகமது இப்ராகிம். 37 வயதான இவர் ஸ்ரீரங்கப்பட்டணாவை சேர்ந்தவர். இப்ராகிம் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இதனால் தன்னிடம் இருந்த நகை, பணம் என பெருமளவு பொருளாதாரத்தை இழந்துள்ளார்.
விட்டதை பிடித்துவிடலாம் என்ற மனக்கோட்டையில் நண்பர்கள், உறவினர்களிடம் கடன் வாங்கி விளையாடி இருக்கிறார். ஆனால் அப்போதும் பெரும் இழப்பையே சந்தித்திருக்கிறார்.
இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு நச்சரித்திருக்கிறார்கள். அப்போது தான் இப்ராகிமுக்கு இந்த திருட்டு யோசனை வந்திருக்கிறது. ஆளில்லாத வீடுகளையும், வயதானவர்கள் வசிக்கும் வீடுகளையும் குறிவைத்து கொள்ளையடிக்கலாம் என திட்டம் போட்டிருக்கிறார்.
அதற்காக கொரியர் பாய்போல மரம் அறுக்கும் இயந்திரத்துடன் களத்தில் இறங்கி இருக்கிறார் இப்ராகிம். நீண்ட நேரம் நோட்டமிட்டு ரமேஷின் மகன் வெளியே சென்றதும் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். அப்போது கொள்ளையடிக்க தடையாக இருந்த யசோதம்மாவை வெட்டி விட்டு, ரமேஷையும் கொலை செய்தது விசாரணையில் தெரிந்திருக்கிறது.
அடுத்து கொள்ளையடிக்கலாம் என்று நினைத்த வேளையில் தான் இப்படி யசோதம்மா கதவை பூட்டி இப்ராகிமை சிக்க வைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்,இப்ராகிமை கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே அனைத்து உண்மைகளும் வெளிவரும்.