41 தொழிலாளர்களின் சுரங்க வாழ்க்கை...இந்தியாவின் தவிப்பை அடக்கிய முதல் வீடியோ-உள்ளிருந்து கேட்ட குரல்

x

41 தொழிலாளர்களின் சுரங்க வாழ்க்கை... இந்தியாவின் தவிப்பை அடக்கிய முதல் வீடியோ - விலகிய மாய இருள்...உள்ளிருந்து கேட்ட குரல்

உத்தரகாண்டில், சுரங்கத்துக்குள் சிக்கி தவித்து வரும் சுரங்க தொழிலாளர்களின் வீடியோ முதல் முறையாக வெளியாகி இருப்பது, மீட்பு பணியில் புது நம்பிக்கையை அளித்துள்ளது. மீட்பு பணி எந்த நிலையில் உள்ளது?

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாஷி சுரங்க விபத்தில் சிக்கிய 41 சுரங்க தொழிலாளர்களின் கதி என்ன ? அவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்களா? என்ற கேள்வியுடன் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து வந்த மீட்பு பணியில், தற்போது நற்செய்தியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சுரங்கத்துக்குள் சிக்கி இருக்கும் தொழிலாளர்களின் வீடியோ வெளியாகி இருக்கிறது.

சுரங்கத்திற்குள் ஏற்கனவே மின்சார வசதி இருப்பதாகவும், தொழிலாளர்களுக்கு தண்ணீர் கிடைக்க அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 9 நாட்களாக உள்ளே சிக்கி இருந்த சுரங்கத் தொழிலாளர்களுக்கு உலர்ந்த பழங்கள் மட்டுமே உணவாக குழாய் வழியாக அனுப்பப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஆறு இன்ச் அளவிலான குழாயை சுரங்கம் இடிந்து விழுந்த இடிபாடுகளுக்குள் வெற்றிகரமாக மீட்பு குழுவினர் நுழைத்துள்ளனர்.

தற்போது அதன் வாயிலாக முதல் முதலாக சுரங்க தொழிலாளர்களுக்கு சுடச்சுட பாட்டில்கள் மூலம் கிச்சடி உணவு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த குழாய் வழியாக எண்டோஸ்கோபிக் பிளக்ஸி கேமராவை அனுப்பி உள்ளே இருக்கும் சுரங்கத் தொழிலாளர்களின் வீடியோ படம் பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுரங்க தொழிலாளர்களுடன் வாக்கி டாக்கி மூலம் தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த ஆறு இன்ச் குழாய் வழியாக, அடுத்து சுரங்கத் தொழிலாளர்களுக்கு சார்ஜர் மற்றும் செல்போன்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

உள்ளே சிக்கி இருக்கும் சுரங்கத் தொழிலாளர்களின் குடும்பத்தினர், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட மாட்டார்களா ? என்ற ஏக்கத்துடன் சுரங்கத்தின் நுழைவு வாயிலில் காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது சுரங்க தொழிலாளர்களின் வீடியோ வெளியாகி இருப்பது அவர்களுக்கு பெரும் ஆறுதல் அளித்துள்ளது.

சில்க்யாரா நுழைவு வாயிலில் இருந்து 270 மீட்டர் தொலைவில்

இடிந்து விழுந்து கிடக்கும் சுரங்கத்தின் இடிபாடுகள் வழியாக துளையிட்டு, தொழிலாளர்கள் வெளியே கொண்டு வரும் வகையில், ராட்சத குழாயை உள்ளே நுழைக்க மீட்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதோடு கிடைமட்டமாக மட்டுமின்றி செங்குத்தாகவும் மீட்பு பணியை மேற்கொள்ள வெவ்வேறு ஐந்து திட்டங்கள் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச நிபுணர் குழுவும் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணியில் உதவுவதற்காக ரோபோகளும் ஈடுபடுத்தப்பட உள்ளன.

தற்போது செங்குத்தாக துளையிடுவதற்காக குஜராத் மற்றும் ஒடிசாவில் இருந்து இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இதனால் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பிறகு மீட்பு பணியில் பெரிய அளவில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது. விரைவில் சுரங்கத்திற்குள் சிக்கி இருக்கும் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்