அதிக லாப ஆசை காட்டி மோசடி..Telegram-ஆல் மறைந்து போன ரூ.12 லட்சம்மக்களே உஷார்..!

x

அரியலூர் மாவட்டம் ஜெஜெ நகரில் வசிக்கும் முகமது தன்வீர் என்பவரின் வாட்ஸ் அப் எண்ணிற்கு, பகுதி நேர வேலை தொடர்பாக குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் உள்ள டெலிகிராம் குரூப்பை அவர் தொடர்பு கொண்டபோது, எதிரே பேசிய நபர், தன்னிடம் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். அதனை நம்பி, முகமது தன்வீர் பல்வேறு டாஸ்க்களை முடிப்பதற்காக பல்வேறு தவணைகளாக 12 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்திய நிலையில், பணம் திரும்ப வராததால் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். இதுதொடர்பான புகாரின் பேரில், விசாரணை நடத்திய போலீசார், இணைய வழி கொள்ளையர்கள் பயன்படுத்திய வங்கி கணக்குகளில் இருந்த 78 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் பணத்தை முடக்கம் செய்தனர். பின்னர் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததில், இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தங்கியிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, மாலிக் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மகாராஷ்டிராவை சேர்ந்த க்ளோன் என்ற நபருடன் இணைந்து மாலிக் இந்த மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து, மாலிக்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள மும்பை குற்றவாளியை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்