74வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்

74வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்த்
x

சரியாக 74 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் கர்நாடகாவில் உதித்தது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் என்ற சினிமா சகாப்தம்...

கர்நாடகாவில் சாதாரண குடும்பத்தில் சிவாஜி ராவ் கெய்க்வாட்-ஆக பிறந்த ரஜினிகாந்த், தனது நண்பரின் உதவியால் மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டியூட்-ல் சேர்ந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்க ஆயத்தமானார்...

அப்போது இயக்குநர் இமயம் கே. பாலச்சந்தர் கண்ணில் ரஜினிகாந்த் தென்பட, அங்கு தொடங்கியது ரஜினியின் திரைத்துறை கணக்கு...

70களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய உச்சபட்ச நடிகர்கள் திரைத்துறையில் கோலோச்சிய காலக்கட்டத்தில், 1975ல் அபூர்வ ராகங்கள் படம் மூலம் திரைத்துறையில் கால் பதித்தார் ரஜினிகாந்த்..

இதன் பின் கன்னட மொழி படத்தில் நடித்திருந்தாலும், கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான மூன்று முடிச்சு படத்தில் வில்லனாக மிரட்ட...தேர்ந்த நடிகராக உருவெடுத்தார்.

வில்லனாக ரஜினிகாந்த்-ன் நடிப்பாற்றலை கண்டு வியக்க, அதையும் தாண்டி கவனம் ஈர்த்தது அவரது ஸ்டைல்....

நடை, உடை, பாவனை தொடங்கி சிகரெட் பிடிப்பது வரை தனக்கே உரித்தான பாணியில் கலக்கி வந்த ரஜினியை, ஸ்டைல் மன்னனாக வியந்து பார்த்தது திரையுலகம்...

மூன்று முடிச்சு, 16 வயதினிலே உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தால் திரையை தகிக்க வைத்த ரஜினிகாந்த்-ஐ கதாநாயகனாக செதுக்கியது பைரவி திரைப்படம்....

அங்கு உருவானது சூப்பர்ஸ்டார் என்ற சாம்ராஜ்ஜியம்....


ஊரெங்கும் சூப்பர்ஸ்டார் என கட் அவுட்டுகள், திக்கெட்டும் ரஜினியின் திரைப்பட ரிலீஸ் என புகழின் உச்சிக்கு சென்றார் ரஜினி...

அடுத்தடுத்து உயரத்தை நோக்கி நகர்ந்த ரஜினிகாந்த், 1979ல் மட்டும் 20 படங்களை கொடுத்து தமிழ் திரைத்துறையை ஆட்சி செய்தார் என்றே சொல்லலாம்...

இதனையடுத்து 80களில் அடுத்தடுத்த படங்களால் பட்டையை கிளப்பினார்...

திரைத்துறைக்கு அறிமுகமான 13 வருடங்களில் 125 படங்கள் கொடுத்து தனக்கென தனி கோட்டை கட்டிய ரஜினி, தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் களமாடினார்...

தற்போது 6 வயது குழந்தை முதல் 60 வயது முதியவர் வரை ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ரஜினி, அமைதி, ஆக்சன், அதிரடி என திரைத்துறையை அதகளப்படுத்தியவர்...

திரைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்ததன் விளைவாக உடல்நிலை குன்றினாலும், அதிலிருந்து மீண்டு கம்பேக் கொடுப்பதே ரஜினியின் ஸ்டைல்...

அது மட்டுமன்றி...ராஜாதி ராஜா, மன்னன், அண்ணாமலை, பாட்ஷா, எஜமான், அருணாச்சலம் போன்ற படங்கள் 175 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடி சூப்பர்ஸ்டார் பெயரை திரையுலகில் ஆழமாக நிலைநாட்டியது...

தலைமுறை கடந்து ஏராளமான நடிகர்கள் வளர்ந்து விட்ட சூழலிலும், 70களில் தொடங்கி இந்த நாள் வரை திரைத்துறையில் தொட முடியாத உயரத்தில் உச்சத்தில் சிம்மாசனமிட்டிருக்கிறார் ரஜினி...

தனது 74 வயதிலும் அடுத்தடுத்து படங்களில் நடித்து திரைத்துறை கட்டி ஆண்டு வரும் ரஜினிகாந்திற்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர் ரசிகர்கள்...


Next Story

மேலும் செய்திகள்