பஹல்காம் தீவிரவாத தாக்குதல் - எதிராக கண்சிவக்கும் பிரபலங்கள்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் திரைப்பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்...
பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த கொடூர பயங்கரவாதத் தாக்குதல் மனிதத்திற்கும் அமைதிக்கும் ஒரு பேரிடி என்றும், அமரன் படப்பிடிப்பின்போது பல அற்புதமான நினைவுகள் அங்கு ஏற்பட்டதாகவும், அங்குள்ள மக்கள் தங்களிடம் அன்பாக நடந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ள அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தாக்குதலுக்குக் காரணமாக உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்...
"இதுபோன்று அப்பாவி மக்களைக் கொல்வது மிகப்பெரிய தீமை...“ என்று பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்...
தாக்குதலைக் கண்டித்துள்ள நடிகர் கமல்ஹாசன், இந்தியா சட்டம், ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பை நிலை நிறுத்துவதற்கான உறுதிப்பாட்டில் ஒற்றுமையுடன் நிற்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...
“அப்பாவி உயிர்களைப் பறிப்பதை எந்த காரணமும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது...“ என்று நடிகர் மோகன்லாலும்,
“நாகரிக உலகில் பயங்கரவாதத்திற்கு எந்த இடமும் இருக்கக்கூடாது... இந்தக் கொடூரமான செயலை ஏற்றுக்கொள்ள முடியாது“ என்று நடிகர் சோனுசூட்டும் கண்டனம் தெரிவித்துள்ளனர்...
பஹல்காமில் நடந்த துரோகம் மற்றும் மனிதாபிமானமற்ற வன்முறைச் செயலால் ஏற்படும் துயரத்தையும் கோபத்தையும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை... ஒரு தேசமாக, நாம் ஒற்றுமையாகவும், வலிமையாகவும் நின்று இந்தக் கொடூரமான செயலுக்கு எதிராக நீதி பெறுவோம் என்று நடிகர் ஷாருக்கான் குறிப்பிட்டுள்ளார்...
“ஒரு குறிப்பிட்ட மதம் அல்லது சமூகம் மீதான வெறுப்பால் திசை திருப்பப்படாமல் இருப்பது குடிமக்களாகிய நமது கடமை“ என்று நடிகை ஆண்ட்ரியா வலியுறுத்தியுள்ளார்...
மனம் நொறுங்கியதாக வருத்தம் தெரிவித்துள்ள சூர்யா, இந்தியா ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கும் என்றும், அமைதிக்கான நீடித்த பாதை உருவாகட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்...
நடிகர்கள் நானி, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட நடிகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்...
