நயன்தாரா தனுஷ் மோதல் விவகாரம் - தனுஷ் தரப்பு சொல்வது என்ன ?
3 விநாடி வீடியோவுக்கு 10 கோடி ரூபாய் கேட்டதாக கூறி நடிகர் தனுஷை நடிகை நயன் தாரா விளாசியுள்ள சூழலில், தயாரிப்பாளராக தனுஷ் தரப்பு நியாயங்களை அவரது ரசிகர்கள் அடுக்கி வருகின்றனர். இதுகுறித்து பார்க்கலாம் விரிவாக...
கோலிவுட்டையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ள தனுஷ்-நயன் இடையிலான மோதல், சமூக வலைத்தளத்திலும் விவாதத்தை கிளப்பியுள்ளது...
நயன் தரப்பு நியாயங்களை அவரது ரசிகர்கள் அடுக்க, தனுஷ் தரப்பு நியாயங்களையும் ஒரு புறம் அடுக்கி வருகின்றனர் இணையவாசிகள்...
இந்நிலையில், 3 விநாடி வீடியோவுக்காக 10 கோடி ரூபாய் கேட்டு தனுஷ் தரப்பு வழக்கறிஞர் அருண் அனுப்பிய நோட்டீஸ்-ல் உள்ள பாயிண்டுகளை பேசி இணையத்தில் விவாதித்து வருகின்றனர்...
அந்த நோட்டீசில், படப்பிடிப்பின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள், ஃபோட்டோ ஷூட்டுகள், வீடியோக்கள் மற்றும் படத்தை விளம்பரப்படுத்த எடுக்கப்படும் வீடியோக்கள் ஆகியவற்றை பயன்படுத்தும் உரிமை படத்தின் தயாரிப்பாளருக்கே உள்ளதாக சுட்டி காட்டப்பட்டுள்ளது.
'நானும் ரவுடி தான்' படத்தின் பதிப்புரிமையை வண்டர்பார் தயாரிப்பு நிறுவனம் தன்வசம் வைத்துள்ளதை நயன்தாரா தரப்பு மறுக்கவில்லை என்பதே, படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட காட்சிகளுக்கும் தனுஷ்தான் உரிமையாளர் என்பதை நிறுவப் போதுமானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் தங்கள் தரப்பில் பணியமர்த்தப்பட்ட ஒருவரால் எடுக்கப்பட்டது. அதனை, கடந்த 22.10.2015 அன்று வண்டர்பார் ஃபிலிம்ஸின் அதிகாரபூர்வ யூடியூப் சேனலில் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் என பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த வீடியோக்கள் வண்டர்பாரின் யூடியூப் சேனலில் இருப்பதை நயன் மறுக்க முடியாத சூழலில், இதன் மூலம் நெட்பிளிக்ஸ் இந்தியா நிறுவனத்தை நயன்தாரா தவறாக வழி நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் நானும் ரவுடி தான் படத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் உரிமையாளர் தனுஷ் தான் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இவற்றை குறிப்பிட்ட பின்னரே, அக்காட்சிகளை 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 10 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்ட ஈடு கோரப்படும் என்றும் நோட்டீஸ்-ல் குறிப்பிடப்பட்டது..
இந்நிலையில், தனுஷின் அனுமதியில்லாமலே விக்னேஷ் சிவன் இக்காட்சிகளை இணைத்ததாகவும், அதன் பின்னரே பல விதங்களில் ஒப்புதல் கோரி அழுத்தம் தந்ததாகவும் கூறுகிறார் சினிமா விமர்சகர் பிஸ்மி..
இதனால் ஒரு தயாரிப்பாளராக, தனுஷ் தரப்பில் நியாயம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வர, சட்ட ரீதியாகவும் தனுஷுக்கு சாதகமான சூழலே நிலவுவதாக கூறப்படுகிறது..