திருமண ஆவணப்படம் சிக்கல் - தனுஷை வார்த்தையால் துளைத்த நயனின் அறிக்கை
இயக்குநர் விக்னேஷ் சிவனுடனான திருமணத்திற்கு பின் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நயன்தாரா, கோலிவுட்டில் புயலை கிளப்பும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்...
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் விக்னேஷை சிவனை கரம் பிடித்த நயன்தாரா, அப்போதே தனது திரை மற்றும் காதல் பயணம் குறித்த கதையை ஆவணப்படமாக நெட்பிளிக்ஸில் வெளியிடுவதாக கூறியிருந்தார்..
ஆனால் அவருக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்து, இரண்டாவது பிறந்தநாளே கொண்டாடி விட்ட சூழலில், ஆவணப்படம் வெளியாவதில் தாமதம் நிலவியது..
இந்த தாமதத்திற்கு நடிகர் தனுஷ் தான் முக்கிய காரணம் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது.. நானும் ரௌடி தான் படம் மூலம் காதலில் விழுந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, அந்த படத்தின் காட்சிகளை தங்களது ஆவணப்படத்தில் பயன்படுத்தியதாக தெரிகிறது..
இச்சூழலில் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், ஆவணப்படத்தில் அந்த படத்தின் காட்சிகளை பயன்படுத்த ஒப்புதல் வழங்காமல் சிக்கல் கொடுத்ததாக கூறப்பட்டது..
இந்நிலையில் ஆவணப்படத்தில் இருந்த சில காட்சிகளை நீக்கி விட்டு வரும் நவம்பர் 18ம் தேதி ஆவணப்படம் வெளியாகும் என டிரைலர் வெளியிட்டிருந்தார்.
இருப்பினும் டிரைலரில் இடம்பெற்ற சில காட்சிகளை குறிப்பிட்டு தனுஷ் நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி, காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நயன் தாரா...
அந்த அறிக்கையில் நடிகர் தனுஷை குறிப்பிட்டு பேசியுள்ள நயன், உங்கள் தந்தை மற்றும் சகோதரர் ஆசியுடன் நல்ல நடிகர் மற்றும் இயக்குநராக இருக்கும் நீங்கள் இதனை படித்து புரிந்து கொள்ள வேண்டும் எனத் தொடங்கி, எவ்வித சினிமா பின்னணியும் இல்லாமல் உருவான பெண் நான் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பழிவாங்கும் எண்ணத்துடன் நீங்கள் இந்த படத்தின் மீது திணிக்கும் வெறுப்பு, என்னையும் எனது கணவரையும் மட்டுமன்றி, இப்படத்திற்காக உழைத்த பலரையும் பாதித்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த ஆவணப்படத்தில், எனது வாழ்க்கை, காதல், திருமணம் தொடர்பாக தொழில் நலன் விரும்பிகள் பலரின் வீடியோ பதிவுகள் உள்ளன..ஆனால் என் மனதிற்கு நெருக்கமான, மிக முக்கியமான படமான நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகள் இடம்பெறவில்லை..
கடந்த இரண்டு ஆண்டுகளாக நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த ஒப்புதல் வாங்க உங்கள் பின்னால் அலைந்தும் நீங்கள் மறுப்பு தெரிவித்ததால், அக்காட்சிகளை நீக்கி விட்டு மறு உருவாக்கம் செய்து வெளியிட ஆயத்தமானோம்..
இன்றுவரை பாராட்டப்படும் நானும் ரவுடி தான் படத்தின் பாடல்கள், உண்மையான அன்பின் வெளிப்பாடாகவே அமைந்த சூழலில், அதனை பயன்படுத்தக் கூடாது என நீங்கள் கூறியது எனது மனதை நொறுக்கியது என வேதனை தெரிவித்துள்ளார்.
தன் மீதும் தனது கணவர் மீதும் கொண்ட தனிப்பட்ட வெறுப்பால் தனுஷ் அனுமதி தரவில்லை என சுட்டிக்காட்டிய அவர், இதை விட அதிர்ச்சி என்னவென்றால் 3 விநாடி வீடியோவுக்கு 10 கோடி ரூபாய் கேட்டு அனுப்பிய நோட்டீஸ் தான் என கடுமையாக சாடியுள்ளார்.
அதுவும் செல்போனில் எடுத்த பிஹைன்ட் தி சீன்ஸ் வீடியோவுக்கு நஷ்ட ஈடு கேட்பதா என கொதித்துள்ள அவர், கீழ்த்தரமான செயல் உங்கள் குணத்தை காட்டுகிறது என சாடியதோடு, இசை வெளியீட்டு விழா மேடைகளில் தனது அப்பாவி ரசிகர்கள் முன்பு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் பாதி கூட இல்லை என வறுத்தெடுத்துள்ளார்..
ஒரு தயாரிப்பாளர் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும் அரசனாகி விடுகிறாரா என கறார் கேள்வி எழுப்பிய அவர், சட்ட ரீதியாக நீங்கள் உங்கள் நடவடிக்கையை நியாயப்படுத்தினாலும் கடவுளின் நீதிமன்றத்தில் நீங்கள் பதிலளிக்க வேண்டும் என காட்டத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
என்னுடைய குற்றச்சாட்டுகளை திரித்து அடுத்த இசைவெளியீட்டு விழா மேடையில் பஞ்ச் பேச வாய்ப்புள்ளது, இருப்பினும் கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என குறிப்பிட்டதோடு, அடுத்தவரின் துன்பத்தை கண்டு ரசித்து திருப்தி அடைவதை குறிக்கும் ஜெர்மன் வார்த்தை ஒன்றை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் என அதிரடி காட்டியுள்ளார்.
இப்படி பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டு சமூக வலைத்தளத்தை அதகளப்படுத்தியுள்ள அவர், தனுஷுக்கு பதிலடி கொடுத்த சூழலில், திரையுலகினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்...
இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு விக்னேஷ் சிவன் தனது தரப்பு ஆதரவு தெரிவிக்க, தங்கலான் பட நடிகை பார்வதி, நஸ்ரியா, அனுபமா பரமேஸ்வரன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நடிகைகள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.
திரையுலகின் முன்னணி நடிகை முன்வைத்துள்ள குற்றச்சாட்டு கோலிவுட்டை பரபரக்க செய்தது மட்டுமன்றி, பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது..