ஞானவேல் ராஜாவால் பேரிடி.. SK கொடுத்த தலைவலி.. சூர்யாவுக்கு விழும் அடி மேல் அடி
அடுத்தடுத்த சிக்கல்களால், கங்குவா திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? என்ற கேள்வி, சூர்யா ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. என்னதான் பிரச்சினை... ? முழு விவரங்களையும் பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து கோலோச்சி வருபவர் நடிகர் சூர்யா...
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக ரிலீஸான படம் “எதற்கும் துணிந்தவன்“..
அதன் பின் கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் வந்து தன் ரசிகர்களுக்கு சூர்யா இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்...
சூர்யாவின் சூரரைப்போற்றும், ஜெய்பீம் திரைப்படமும் மெகா ஹிட் அடித்திருந்தாலும் இரண்டும் ஓடிடியில் வெளியானவை.. இந்நிலையில், தனது தியேட்டர் கம்பேனிக்குக்கு சுமார் இரண்டு வருடத்திற்கும் மேல் உழைத்து பான் இந்தியா திரைப்படமாக கங்குவா மூலம் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறார் சூர்யா... அதுவும் தன் கேரியரில் முதல் 3டி படமாக..
படம் நெருப்புபோல் இருக்கும் என முழு நம்பிக்கையில் படத்தை சூர்யா ப்ரோமோஷன் செய்து வரும் வேளையில், கூடவே சிக்கல்களும் கங்குவாவை தொற்றிக் கொண்டே பின் தொடர்கிறது...
மொத்த வில்லங்கமும் “கங்குவா“ திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தை மையம் கொண்டுதான்...
முதலில், ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்ற ஸ்டூடியோ க்ரீன் , அதனை முழுவதுமாக திருப்பி செலுத்தாத சூழலில் கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது..
இதில், பணம் முழுவதையும் திருப்பி செலுத்தி விட்டதாக ஸ்டூடியோ க்ரீன் பதிலளிக்கவே, கங்குவாவிற்கான தடை உத்தரவை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்..
ஆனால், அடுத்த கணமே அடுத்தடுத்த சிக்கல்கள் வந்து விழுந்தன..
சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து, ஸ்டூடியோ க்ரீன் பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரரான ஞானவேல்ராஜா மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் சுமார் 10 கோடியே 35 லட்ச ரூபாயை கடன் பெற்றதாக தெரிகிறது..
இதனிடையே, நிதி இழப்பு ஏற்பட்டு திவாலாகி அர்ஜூன்லால் மரணமடைந்த நிலையில், அவரின் சொத்துக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தின் சொத்தாட்சியர் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்டது..
இந்நிலையில், அர்ஜூன்லால் சுந்தர்தாஸிடம் கடன் வாங்கியவர்களின் பட்டியலை சேகரிக்கும் நடவடிக்கையில் சொத்தாட்சியர் இறங்கியிருக்கிறார்..
இதில், கடந்த 2013இல் ஞானவேல்ராஜா தரப்பு வாங்கிய 10 கோடியே 35 லட்ச ரூபாய் பணத்தை, வட்டியுடன் சேர்த்து சுமார் 20 கோடியாக செலுத்த உத்தரவிடுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்த நிலையில், பணத்தை நவம்பர் 13 க்குள் செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, கூடவே பணத்தை செலுத்தாமல் படத்தை வெளியிடக்கூடாது எனவும் உத்தரவிட்டிருந்தார்...
இந்த சூழலில், சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் உட்பட மூன்று திரைப்படங்களுக்கான டப்பிங் உரிமையை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்திடம் இருந்து சுமார் ஆறு கோடி ரூபாய்க்கு சென்னையை சேர்ந்த பிரைவேட் லிமிட்டெட் கம்பெனி ஒன்று வாங்கியதாக தெரிகிறது..
இதில், தானா சேர்ந்த கூட்டம் படத்தை தவிர மற்ற இரு படங்களும் கைகூடாத நிலையில், 5 கோடி ரூபாயை திருப்பி செலுத்திய ஸ்டூடியோ க்ரீன், மீதமுள்ள ஒரு கோடியே அறுபது லட்சத்தை வழங்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டிருக்கிறது..
இந்நிலையில், இந்த ஒரு கோடியே அறுபது லட்சத்தையும் திருப்பி செலுத்த உத்தரவிட்ட நீதிபதி, பணத்தை செலுத்தாமல் படத்தை வெளியிடக்கூடாது எனவும் மறுபடியும் உத்தரவிட்டிருக்கிறார்...
இந்த உத்தரவுகள்தான் சூர்யா ரசிகர்களுக்கு பேரிடியாய் இறங்கி கொண்டிருக்கிறது..
இதனிடையே, சுமார் 250 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்து இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்தை தூக்க, சில திரையரங்கு உரிமையாளர்களுக்கு மனம் வரவில்லை எனக்கூறப்படும் நிலையில், இதுவும் ஒரு புது சிக்கலாக கங்குவா திரைப்படத்திற்கு உருவாகி இருக்கிறது..
இதனால், இரண்டரை வருடங்களாக சூர்யாவின் திரைப்படத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள், படம் ரிலீஸாக இன்னும் இரு நாள்களே உள்ள நிலையில், டிக்கெட் புக் செய்ய முடியாத விரக்திக்கும், சோகத்திற்கும் ஆளாகி குமுறி வருகின்றனர்...