யார் இந்த `டெல்லி' கணேஷ்? பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. கமலுக்கு வில்லன்.. விஜய்யுடன் கறார்

x

நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமாகி இருக்கிறார்.. அவரது வாழ்க்கை மற்றும் திரைத்துறையில் அவர் கடந்து வந்த பாதை குறித்து பார்க்கலாம்..விரிவாக..

சென்னை ராமாபுரத்தில் நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவருக்கு வயது 80.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம் வல்லநாடு பகுதியில், 1944 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 1 ஆம் தேதி பிறந்தவர் தான் கணேஷ். 1964 முதல் 1974 வரை இவர் இந்திய விமானப்படையில் பணியாற்றி இருந்தார். 1976-ல் திரைத்துறைக்கு வந்தார். இவர் தக்ஷிண பாரத நாடக சபா எனப்படும் டெல்லி நாடகக் குழுவில் உறுப்பினராக இருந்தார். இதனாலேயே, அவருக்கு டெல்லி கணேஷ் என்ற பெயர் வந்ததாக தெரியவருகிறது.

நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது அபார நடிப்பின் மூலம் சிறந்த நடிகராக டெல்லி கணேஷ் கோலோச்சினார். இதேபோல், டப்பிங் கலைஞராகவும் இவர் சிறந்து விளங்கினார். தமிழ் தவிர, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் டெல்லி கணேஷ் நடித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகுக்கு இவரை இயக்குனர் கே. பாலசந்தர் அறிமுகம் செய்திருந்தார்.

சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா, தெனாலி, சங்கமம், அவ்வை சண்முகி, இந்தியன் 2 உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர், டெல்லி கணேஷ்... திரைப்படங்களில் இவருக்கு பெரும்பாலும், துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தன. அந்தவகையில், கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படைத்தில், பிரான்சிஸ் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமான வில்லான இவர் நடித்திருப்பார்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், தனுஷ், விஷால் எனப் பல முன்னணி நடிகர்களுடனும் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் கட்சி தொடங்கிய தவெக தலைவர் விஜய்யுடன், தமிழன் படத்தில் கறார் காட்டும் வழக்கறிராக நடித்து அசத்தியிருப்பார்.

இதுமட்டுமில்லாமல், 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். 1979 ஆம் ஆண்டு இவர் நடித்த பசி திரைப்படத்திற்கு "தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். அதோடு, 1993 - 1994ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு மாநில அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார்.

இதேபோல, சமீபத்தில் சென்னையில் நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68-வது பொதுக்கூட்டத்தில் சி. ஆர். விஜயகுமாரி மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோருக்கு கலையுலக வாழ்நாள் சாதனையாளர்கள் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இவரது 80-ஆவது வயதில் இவரது குடும்பத்தினர் டெல்லி கணேஷிற்கு பிரம்மாண்டமாக சதாபிஷேகம் செய்திருந்தனர்.

சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரது உயிர் பிரிந்தது. டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்