முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை... "பிரதமர் சார்பில்..." உறுதியளித்த ராஜ்நாத் சிங்
மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்
ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
டெல்லியில் இருந்து இன்று காலை சென்னை வந்தடைந்தடைந்த அவர், ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக நிதி மற்றும் மின்சார துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆகியோரும் உடன் சென்றனர். அப்போது, மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்தும், மீட்பு பணி குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வுக்கு பின்னர் தலைமைச்செயலகத்தில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார். அப்போது புயல் வெள்ள பாதிப்பு சேத விவரங்கள் குறித்தும், அதை எதிர்கொண்டு தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகள் பற்றியும் வீடியோ காட்சி காட்டப்பட்டது. பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழ்நாடு அரசின் கோரிக்கையை பரிசீலித்து, மத்திய அரசு நிதி உதவி வழங்கும் என தெரிவித்தார். முதற்கட்டமாக 450 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாகவும் கூறினார்.