ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் த்ரில் வெற்றி
டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை 3 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசம் த்ரில் வெற்றி பெற்றது. பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் நஜ்முல் ஷான்டோ, 71 ரன்கள் அடித்தார். பின்னர் 151 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த சீன் வில்லியம்ஸும், ரயன் பர்லும் பொறுப்புடன் ஆடி, தங்கள் அணியை மீட்டனர். அரைசதம் அடித்த சீன் வில்லியம்ஸ், 19வது ஓவரில் 64 ரன்களில் ரன்-அவுட் ஆனார். ஜிம்பாப்வேவின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் 3வது மற்றும் 4வது பந்தில் ஃபோர் மற்றும் சிக்சரை பறக்கவிட்ட நகர்வா, அடுத்த பந்தில் அவுட் ஆனார். கடைசி பந்தை முசரபானி தவறவிட்டதால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றதாக கருதப்பட்டது. ஆனால், கடைசி பந்தை வங்கதேச கீப்பர் நுருல், ஸ்டம்புக்கு முன்பாகவே பிடித்ததால், நடுவர்கள் நோ-பால் அறிவித்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பான நிலையில், ஃப்ரீ-ஹிட் பந்தையும் முசரபானி தவறவிட்டார். இறுதியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் த்ரில் வெற்றி கண்டது.