சென்டிமென்டாக பேசிய இளைஞர்- நம்பி வந்த மூதாட்டிக்கு கல்தா... சென்னையில் சிக்கிய மோசடி ஆசாமி
சென்னை அமைந்தகரையில், மூதாட்டி சரோஜா என்பவர், முதியோர் உதவித்தொகை பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். அப்போது, அவரிடம் அருகில் வந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், பொட்டலத்தில் சாப்பாடு வாங்கி கொடுத்து விட்டு, அன்பாக பேசியுள்ளார். மேலும், தொழிலதிபர் ஒருவர் அவரது வீட்டில், வயதானவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணமும், இலவசமாக சேலையும் தருவதாகக் கூறி, மூதாட்டி சரோஜாவை அந்த நபர் ஆட்டோவில் ஏற்றிச் சென்றார். பின்னர், ஒரு தொழிலதிபர் வீட்டின் முன்பு ஆட்டோவை நிறுத்திவிட்டு, நகை அணிந்தபடி சென்றால் பணம் தரமாட்டார்கள் எனக்கூறி, அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் செயின் மற்றும் கையில் பணப்பையில் வைத்திருந்த 44 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். ஆனால், வீட்டின் உள்ளே சென்றபோது, மூதாட்டி, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளை வைத்து, செங்குன்றம் பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், 20க்கும் மேற்பட்ட இடங்களில், இதே பாணியில் கைவரிசை காட்டி கைது செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.